loader

உள்ளூர் செய்திகள்

சமீபத்திய செய்திகள்

ஸ்ருதிஹாசன், சில நாள்களுக்கு முன்பு தன் நீண்ட நாள் காதல் பயணத்தை முடித்துக்கொண்டார். உறவு முறிவுக்கான காரணம் எதுவும் வெளியிடப்படாத நிலையில், தற்போது தெலுங்கு ரியாலிட்டி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டவர், அது பற்றி மனம் திறந்திருக்கிறார்.

ஸ்ருதிஹாசனும், லண்டனைச் சேர்ந்த நடிகரும் பாடகருமான மைக்கேல் கோர்சாலும் நீண்ட நாள்களாகக் காதலித்து வந்தனர். இருவரும் கூடிய விரைவில் திருமணம் செய்யவிருப்பதாகச் செய்திகள் வெளியாகிய நிலையில், மைக்கேல் கோர்சால் தன்னுடைய இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில், `இந்த இளம்பெண் என் வாழ்க்கையின் முக்கிய, சிறந்த நண்பராக எப்போதும் இருப்பார்' எனப் பதிவிட்டு தங்களின் காதல் பயணம் முடிவுற்றது என்று மறைமுகமாகத் தெரிவித்திருந்தார்.
இதைப் பற்றி எதுவும் பேசாமல் இருந்த ஸ்ருதி, தங்கள் பிரிவுக்கான காரணத்தைப் பகிர்ந்துகொண்டார்.

"நான் ரொம்ப கூல் டைப். யாருக்கும் எந்தத் தீங்கும் நினைக்காதவள். மிகவும் எமோஷனலான பெண். அதனால்தானோ என்னவோ மற்றவர்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள். இது எனக்கு ஒரு நல்ல அனுபவம் என்றுதான் சொல்லுவேன். காதலில் விழுவதற்கு எந்த ஃபார்முலாவும் இல்லை. நல்லவர்கள் நல்ல நேரங்களில் நல்லவர்கள். அதே நபர்கள் சில நேரங்களில் மோசமானவர்களாக மாறலாம்.

ஆனால், எனக்கு இதில் எந்த வருத்தமும் இல்லை. இது ஒட்டுமொத்தமாக எனக்கு ஒரு நல்ல அனுபவமாக இருக்கிறது. இதில், நான் நிறைய கற்றுக்கொண்டேன். இதை நல்ல கற்றல் அனுபவம் என்று சொல்லலாம். நான் எப்போதும் ஓர் ஆழமான அன்புக்காகக் காத்திருப்பவளாக இருப்பேன். அதை நான் எதிர்பார்த்திருக்கிறேன் என்று அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என்று அந்நிகழ்ச்சியில் பகிர்ந்துகொண்டுள்ளார் ஸ்ருதி!

கோத்தா திங்கி: இங்குள்ள கம்புங் மவாய் பாரு அருகே, பத்து 11-ல் உள்ள ஒரு ஜெட்டியில், சுங்கை மவாய் லாமா மீது தவறி விழுந்து 46 வயது நபர் மூழ்கினார்.

கோத்தா திங்கி தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை நடவடிக்கை தளபதி இப்ராஹிம் வாஹித் இதுகுறித்துக் கூறுகையில், திங்கள்கிழமை இரவு 8.47 மணியளவில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடமிருந்து திணைக்களத்திற்கு  அழைப்பு வந்ததாகத் தெரிவித்தார்.
ஆனாலும், மீட்புக் குழு வருவதற்கு முன்பு பாதிக்கப்பட்ட நபரைப் பொதுமக்கள் மீட்டனர்.
முஸ்தபா அலி என அடையாளம் காணப்பட்ட அந்த நபர், மாவாய் காவல் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டார்.
இருப்பினும், காவல் நிலையத்திற்கு வந்த மருத்துவக் குழுவினரால் பாதிக்கப்பட்டவர் இறந்ததாக அறிவிக்கப்பட்டது!

இதற்கிடையில், ஜொகூர் பேரிடர் மேலாண்மைக் குழு ஒரு அறிக்கையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 165 குடும்பங்களைச் சேர்ந்த 729 பேர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திங்கள்கிழமை இரவு 9 மணி நிலவரப்படி, நான்கு தற்காலிக வெள்ள நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
எஸ்.கே. தெலுக் ராமுனியா, கோலேஜ் வோகேஷனல் கோத்தா திங்கி, எஸ்.ஜே.கே.சி நியூ கோத்தாமற்றும் திவான் செரி தெரட்டாய் ஆகிய பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன!

 

ரஜினிகாந்த் நடித்து பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது 'தர்பார்' திரைப்படம். இத் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேரு உள் விளையாட்டு அரங்கில் நேற்று  நடைபெற்றது.

நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் முருகதாஸ், ஷங்கர், அனிருத், பாடலாசிரியர் விவேக், நிவேதா, பவானி உள்ளிட்ட நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் இதில் கலந்து கொண்டனர்.

விழாவின் நிறைவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியபோது, 'ரமணா' படத்தைப் பார்த்தபோதே முருகதாஸை எனக்கு ரொம்பப் பிடித்துவிட்டது. 'கஜினி' திரைப்படம் வெளியானதுமே, முருகதாசும் நானும் இணைந்து படம் பண்ண பேச்சுவார்த்தை நடந்தது. ஆனாலும் சில காரணங்களால் அது தள்ளிப்போய்விட்டது.

எனக்கு வயசாகிவிட்டது என்பதால், இனி டூயட் பாடல்கள் வேண்டாம் என்று முடிவெடுத்தேன். எனவேதான், கபாலி, காலா போன்ற படங்களில் நடிக்கத் தொடங்கினேன்.

ரஜினிகாந்த் என்ற பெயரை ஒரு நல்ல நடிகனுக்கு வைக்கலாம் என்று பாலச்சந்தர் யோசிச்சிட்டு இருந்தப்போ என்னப் பாத்து அந்த நம்பிக்கையை வச்சி அந்தப் பேரை எனக்கு வச்சாரு. அந்த நம்பிக்கை வீண் போகவில்லை. அதே மாதிரிதான், என் மேல நீங்க வச்சிருக்குற நம்பிக்கை என்றும் வீண் போகாது.

தர்பார் படத்தின் ஆதித்யா அருணாசலம் கேரக்டர் மிகவும் பவர்ஃபுல்லானது. 160-க்கும் மேற்பட்ட படங்களில் நான் நடித்திருந்தாலும், இந்தப் படம் ஸ்டைலாக, த்ரில்லாக இருக்கும். சந்திரமுகி படத்தைக் காட்டிலும், நயன்தாரா இப்போதுதான், கிளாமராகவும் எனர்ஜியாகவும் இருக்கிறார்.

இந்த வருடம் என் பிறந்த நாள் என் வாழ்க்கையில் மிக முக்கியமான பிறந்த நாள். எழுபதாவது வயதில் அடியெடுத்து வைக்கிறேன். அன்று நான், வழக்கம்போல, சென்னையில் இருக்க மாட்டேன். எனது பிறந்த நாளை ஆடம்பரமாக கொண்டாடாதீர்கள் என அவர் தெரிவித்தார்!

பத்துமலை டிச. 07:

குடியிருப்புவாசிகள் தங்களின் வீட்டிற்கு அருகில் வசிக்கும் அண்டை, அயலாரை அறிந்திருப்பதுடன், நட்பு பாராட்டுவது பல வகையிலும் நன்மை அளிக்கும் என்று கோம்பாக் மாவட்ட ஒற்றுமை உதவி அதிகாரி அஸ்னிடா பிந்தி யோப் மாட் ஜாசிட், தாமான் ஸ்ரீ கோம்பாக் வட்டார மக்களைக் கேட்டுக் கொண்டார்.

கடந்த சனிக்கிழமை டிசம்பர் 6-ஆம் நாள் தாமான் ஸ்ரீகோம்பாக் 10-வது பிரிவு ருக்குன் தெத்தாங்கா நிர்வாகக் குழுவின் 2020-21 பொறுப்பாளர் தேர்வை நடத்தி வைத்த அஸ்னிடா, பொதுமக்களிடையே உரை நிகழ்த்தியபோது குடியிருப்பாளர்களிடையே அறிமுகமும் ஒருங்கிணைப்பும் இல்லாததுதான் பலவித சமூகக் குற்றங்களுக்கு இடம் அளிக்கிறது என்றார்.

இனம், மொழி, சமய வேறுபாடுகள் இல்லாமல் மலேசிய மக்கள் ஒற்றுமையை நிலைநாட்டி வருவது பாராட்டத்தக்கது என்றாலும் பக்கத்து வீடுகளில் வசிப்பவர்களிடம் நேச உணர்வை வளர்க்க வேண்டும். திருட்டு போன்ற நடவடிக்கைகளைத் தடுக்க இது உதவும். அதேவேளை, ஒருவருக்கு ஒருவர் அவசர வேளைகளில் உதவிக் கொள்ளவும் இது துணையாக இருக்கும் என்றார்.

தாமான் ஸ்ரீ கோம்பாக், 10-வது பிரிவின் ருக்குன் தெத்தாங்கா தலைவராக அஸ்மான் தொடரும் வேளையில், புதிய செயலாளராக திருமதி ஸாராவும், புதிய பொருளாளராக காடிரும் தேர்வு பெற்றனர்.

26 பேர் கொண்ட நிர்வாகக் குழுவில் ஆரோக்கிய தாஸ், கணேசன், வேலாயுதம், கார்த்திகேயன், விசுவநாதன் உட்பட ஆறு தமிழர்களும், ஆ ஹோ என்ற சீனரும் அடுத்த ஈராண்டு தவணைக்கான நிர்வாகக் குழுவிற்குத் தேர்வு பெற்றனர்!

(வெற்றி விக்டர்- காளிதாஸ்)

கோலகுபு பாரு டிசம்பர்-8

உலுசிலாங்கூர்  நாடாளுமன்றத்தை மீட்டெடுக்க ம.இ.கா ஆயத்தம் ஆகியுள்ளது.

ம.இ.கா வசம் இருந்த உலு சிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதியைக் கடந்த பொதுத் தேர்தலில் பக்காத்தானிடம் பறிகொடுத்தது ம.இ.கா.

இம்முறை எப்படியாவது அத்தொகுதியை மீட்டெடுக்கும் முயற்சியில் ம.இ.கா தலைமைத்துவம்  தீவீரம் காட்டி வருகிறது.  

அந்த வகையில், இன்று கோலகுபு பாரு ம.இ.கா தொகுதி ஏற்பாட்டில் பொதுமக்கள் சந்திப்புடன் கூடிய தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு  நிகழ்ச்சி நடைபெற்றது. 

இந்த மக்கள் சந்திப்பின் வழி,  உலு சிலாங்கூர் தொகுதியின் ம.இ.கா வேட்பாளர் யார் என்பது 80% சதவிகிதம் உறுதியானது. 

ம.இ.கா-வின் தேசிய உதவித்தலைவர் டத்தோ டி.மோகன், உலு சிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட அதிக வாய்ப்பு உள்ளதாக  அண்மையில் ஒரு தகவல் வெளியானது. அதனைத் தொடர்ந்து இன்று உலுசிலாங்கூர் தொகுதியில் நடைபெற்ற தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு அதற்கு ஒரு விடையாய் அமைந்துள்ளது.  

டத்தோ டி. மோகன் தலைமையில் நடந்த இந்த தீபாவளி உபசரிப்பில், அவர் இன்று  பொதுமக்களை நேரடியாகச் சந்தித்துக் கலந்துரையாடினார். 

முன்னதாக, இன்று காலையில் அந்த வட்டாரத்தில் உள்ள கோயிலில் தரிசனம்  பெற்று, தனது மக்கள் சந்திப்பைத் தொடங்கினார்.

ஒரு பெரிய சுனாமிக்குப் பிறகு, உலு சிலாங்கூரில் ம.இ.கா மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளதையே இது காட்டுகிறது.

அதோடு மட்டும் அல்லாமல், வரும் டிசம்பர் 18-ஆம் தேதி, மாபெரும் கூட்டத்தை உலு சிலாங்கூர் தொகுதியில் ம.இ.கா ஏற்பாடு செய்துள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது!