loader

உள்ளூர் செய்திகள்

சமீபத்திய செய்திகள்

கோலாலம்பூர், அக்.17-

மலேசிய இந்தியர்கள் கொண்டாடும் முதன்மையான பண்டிகைகளில் ஒன்றாகத் தீபாவளி விளங்குகிறது. மலேசியப் பதிவேடுகளில் தீபாவளி முதன்மையான பண்டிகைகளில் ஒன்றாகக் குறிப்பிடப்பட்டு, அன்றைய தினம் பொது விடுமுறையும் அறிவிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது.

 

தீபாவளி வாழ்த்துகள், தீபாவளியை முன்னிட்டுப் பிரசுரிக்கப்படும் வாழ்த்து அட்டைகள், அச்சு ஊடகங்களின் தீபாவளி வாழ்த்துச் செய்திகள் என அனைத்திலும் ‘தீபாவளி’ என்ற சொல்லே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

 

இந்நிலையில், பிரிக்ஃபீல்ட்ஸ் வணிக மையத்தின் தலைவாசல் பெயர்ப்பலகையில் ‘தீவாளி’ எனக் குறிப்பிடப்பட்டிருப்பது தவறானது என்று சுட்டிக்காட்டிய பின்னரும், அந்தத் தவறை ஒப்புக்கொண்டு திருத்தாமல், தங்களின் செயலுக்கு நியாயம் கற்பிக்கும் வகையில் அதனை அப்படியே விட்டிருப்பது கண்டனத்துக்குரியது.

 

மலேசியாவில் வாழும் இந்தியர்களில் பெரும்பான்மையான தமிழர்கள் ‘தீபாவளி’ என்றே இப்பண்டிகையை அழைக்கின்றனர். அவ்வாறு இருக்கும்போது, அந்தச் சொல்லை மாற்ற வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது?

 

மொழி என்பது ஓர் இனத்தின் அடையாளமாகும். தமிழர்கள் அதிகம் வாழும் பிரிக்ஃபீல்ட்ஸ் பகுதியில், அவர்களின் உணர்வுகளை அவமதிக்கும் வகையில் இத்தகைய பெயர்ப்பலகை தேவையா?

 

இத்தகைய செயல் தீபாவளிக் கொண்டாட்டத்தின் மகிழ்ச்சியைக் குறைப்பதுடன், தீபாவளியின் அடையாளத்தையும் அவமதிக்கும் வகையில் அமைந்துள்ளது.

 

பல்லின மக்கள் இணைந்து வாழும் மலேசியாவில், பிற இன மக்களின் மொழி உணர்வுகளையும் அடிப்படை அடையாளங்களையும் பாதிக்கும் அல்லது புண்படுத்தும் செயல்கள், குறிப்பாக அரசாங்கத்தின் சார்பில், தவிர்க்கப்பட வேண்டும்.

 

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம், ‘தீபாவளி’ என்ற சொல்லையே நிலைநிறுத்த வேண்டும் என்பதை உறுதியாக வலியுறுத்துகிறது.

 

‘தீபாவளி’ என்ற சரியான வரலாற்றுச் சொல்லை முழுமையாக நிலைநிறுத்துவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். நாட்டின் நல்லிணக்கத்தையும் தமிழர்களின் மொழி உணர்வையும் பாதுகாக்கும் பொருட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு, பெயர்ப்பலகையில் உள்ள பிழையைத் திருத்தி, ‘தீபாவளி’ என்ற சரியான சொல்லைப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

 

சாந்தா காளியப்பன்

செயலாளர்

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்

சுபாங், அக்.16-

கடந்த 9 ஆண்டுகளாக சுபாங் ஜெயா ஸ்ரீ வரதராஜு பெருமாள் ஆலயத்தில் புரட்டாசிமாதத்தில் பூஜைகள் நடைபெற்று, மாத இறுதியில் ரத ஊர்வலம் நடப்பது வழக்கம். அந்தநேரத்தில் அவ்வட்டார மக்கள் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி, ரத ஊர்வலத்தில்கலந்துகொள்வது வழக்கம்.

 

ஆனால், இந்த முறை ரத ஊர்வலம் நடத்தப்படாது என்ற கடிதம் ஒன்று இப்போதுகிடைத்துள்ளதாகவும், அந்த முடிவை ஆலயத் தலைவர் எடுத்துள்ளதாகவும் ஆலயத்தின்நிர்வாகக் குழு உறுப்பினர் கணபதி தெரிவித்துள்ளார்.

 

இதனால் வட்டாரப் பொதுமக்கள் மிகுந்த அதிருப்தியில் இருப்பதாகக் கூறிய கணபதி, ஆலயத்தில் உள்ளகப் பிரச்சினைக்கு ரத ஊர்வலத்தை ரத்து செய்வது தவறான முடிவு எனத்தெரிவித்தார்.

 

நாளை ரத ஊர்வலம் நடைபெறும் நாள். மக்களுக்காக ஆலயத் திருப்பணி வேலைகளைசெய்த நாம், மக்களுக்கு பல வசதிகளை ஏற்படுத்தி, அவர்கள் நல்ல முறையில் வழிபடஉறுதுணையாக இருக்க வேண்டுமே தவிர, அவர்களுக்கு இடையூறு செய்யக்கூடாது.

 

எப்போதும் போல் ரத ஊர்வலம் நடைபெற ஆலயத் தலைவர் முடிவெடுக்க வேண்டும் எனகணபதி கேட்டுக்கொண்டார்.

கோலாலம்பூர்,அக்.14-

 

தீபாவளி பண்டிகையின் பெயரை ‘DIWALI’ எனக் குறிப்பிடுவதற்குப் பதிலாக, ‘DEEPAVALI’ எனப் பயன்படுத்த வேண்டும் என்றும், தீபாவளி சந்தையின் நுழைவாயில் பதாகையில் தமிழ்மொழிக்கும் உரிய இடமளிக்க வேண்டும் என்றும் கூட்டரசுப் பிரதேச மஇகா தலைவர் டத்தோராஜா சைமன் வலியுறுத்தியுள்ளார்.

 

சமயம், மொழி மற்றும் கலாசாரத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, கோலாலம்பூர்பிரிக்பீல்ட்ஸில் நடைபெற்ற அமைதிப் போராட்டத்தில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

அமைச்சர் ஹனா யோவின் ஏற்பாட்டில் அரசாங்கத்தால் அமைக்கப்பட்டுள்ள தீபாவளிசந்தையின் நுழைவாயிலில் வைக்கப்பட்டுள்ள பதாகையில், ‘DEEPAVALI’ என்பதற்குப்பதிலாக ‘DIWALI’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருப்பது இந்திய சமூகத்தினரிடையேஅதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

 

தீபாவளி சந்தையின் நுழைவாயில் பதாகையில் ‘DEEPAVALI’ என்ற சொல்லைப்பயன்படுத்துவதுடன், தமிழ் மொழியையும் இணைக்க வேண்டும் என்பதே தங்களின்கோரிக்கை என டத்தோ ராஜா சைமன் குறிப்பிட்டார்.

 

மேலும், நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள இரு தூண்களிலும் ‘DIWALI’ என்ற சொல்இடம்பெற்றிருந்த நிலையில், தற்போது ஒரு தூணில் மயில் படம் வைக்கப்பட்டு அந்தஎழுத்துகள் மறைக்கப்பட்டுள்ளது.இருப்பினும், மற்றொரு தூணில் ‘DIWALI’ என்ற சொல்இன்னமும் காணப்படுவதாக அவர் தெரிவித்தார்.

 

எனவே, பிரச்சினைக்கு முழுமையான தீர்வு காணும் வகையில், சம்பந்தப்பட்ட தரப்பினர்உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

 

மொழி மற்றும் சொற்களின் பயன்பாடு தொடர்பான விவகாரத்தில் அதிகாரப்பூர்வமானவழிகாட்டுதல்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்ட டத்தோராஜா சைமன், மலேசிய மொழி மற்றும் நூலகக் கழகமான Dewan Bahasa dan Pustaka வெளியீடுகளிலும் ‘DEEPAVALI’ என்ற சொல்லே குறிப்பிடப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டினார்.

 

ஆகவே, தீபாவளி பண்டிகையை அடையாளப்படுத்தும் வகையில் ‘DEEPAVALI’ என்றசொல்லைப் பயன்படுத்துவதுடன், தமிழ் மொழி மற்றும் இந்தியக் கலாசாரத்தின்தனித்துவத்தையும் மதிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

 

இந்த அமைதிப் போராட்டத்தில் பொது அமைப்புகள், மக்கள் முற்போக்குக் கட்சியான பிபிபி(PPP) மற்றும் மலேசிய மக்கள் சக்தி கட்சியின் பிரதிநிதிகள் உள்ளிட்ட 100-க்கும்மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

 

சமயம், மொழி, கலாசாரம் ஆகியவற்றின் அடையாளங்களைப் பாதுகாப்பதன் அவசியத்தைவலியுறுத்தும் நோக்கில் இந்த அமைதிப் போராட்டம் நடைபெற்றது.

கோலாலம்பூர்:

இந்தியாவைச் சேர்ந்த மகளிர் சுகாதாரப் பராமரிப்பு நிறுவனமான Femi9 International, மலேசியாவில் தனக்குக் கிடைத்துவரும் வரவேற்பைத் தொடர்ந்து, இந்நாட்டில் தனது சந்தையை மேலும் விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது.

Femi9 மலேசியாவின் தலைமைச் செயல்முறை அதிகாரி சுரேஷ் தனசாகரன் கூறுகையில், தற்போது 15 நாடுகளில் தனது தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ள இந்நிறுவனம், தென்கிழக்காசிய சந்தையில் தனது இருப்பை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

மலேசியாவில் Femi9 நிறுவனத்தை அறிமுகப்படுத்தி விரிவுபடுத்தும் முயற்சிக்கு அதன் நிறுவனர் டாக்டர் கோமதியும் ஆதரவளித்து வருவதாக அவர் குறிப்பிட்டார். இதன் ஒரு பகுதியாக, சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்பு டாக்டர் கோமதி நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டு நிறுவனத்தின் தயாரிப்புகளையும் அதன் நோக்கத்தையும் அறிமுகப்படுத்தினார்.

Asian Influential Award 2026 விருது நிகழ்ச்சியில் பங்கேற்கக் கிடைத்த வாய்ப்பு, Femi9 International நிறுவனத்திற்கும் அதன் நிறுவனருக்கும் கிடைத்த பெருமைமிகு அங்கீகாரம் என்று சுரேஷ் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சி, வணிகத் துறையில் புதிய தொடர்புகளை ஏற்படுத்தவும், நிறுவனத்தின் வணிக வலையமைப்பை விரிவுபடுத்தவும் சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

Femi9 நிறுவனம் பெண்களின் சுகாதாரப் பராமரிப்புக்கான தயாரிப்புகளில், குறிப்பாக பெண்களின் தனிப்பட்ட சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் தயாரிப்புகளில் கவனம் செலுத்தி வருகிறது. பெண்களுக்குப் பயனளிக்கும் தரமான தயாரிப்புகளை வழங்குவதுடன், அவற்றை அதிகமான நுகர்வோரிடம் கொண்டு சேர்ப்பதும் நிறுவனத்தின் முக்கிய நோக்கமாகும்.

பெண்களுக்கான சுகாதாரப் பராமரிப்புப் பொருட்களுடன், குழந்தைகளுக்கான டயப்பர் தயாரிப்புகளையும் நிறுவனம் தனது தயாரிப்பு வரிசையில் இணைத்துள்ளது.

இதனிடையே, டாக்டர் கோமதி சுமார் 40 ஆண்டுகளாகத் தொழில்முனைவோர் துறையில் பெற்றுள்ள அனுபவமும் Femi9 நிறுவனத்தின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்களிப்பாக அமைந்துள்ளதாக சுரேஷ் குறிப்பிட்டார்.

தனது நீண்டகாலத் தொழில் பயணத்தில் 100-க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ள டாக்டர் கோமதி, சர்வதேச அளவிலான நிகழ்ச்சிகளிலும் உரையாற்ற அழைக்கப்பட்டுள்ளார். மேலும், அவரது தொழில்முனைவோர் அனுபவங்களும் சாதனைகளும் இந்தியாவில் வணிக நிர்வாக முதுநிலை (MBA) பாடத்திட்டத்திற்கான பாடநூலிலும் இடம்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.

டாக்டர் கோமதி இந்தியக் குடியரசுத் தலைவரிடமிருந்தும் விருது பெற்றுள்ளதுடன், கர்நாடக மாநில அரசிடமிருந்து சுற்றுச்சூழலுக்கு உகந்த தயாரிப்புகள் தொடர்பான அங்கீகாரத்தையும் பெற்றுள்ளார்.

ஏற்கெனவே பல்வேறு விருதுகளையும் அங்கீகாரங்களையும் பெற்றிருந்தாலும், Asian Influential Award 2026 அங்கீகாரம் அவருக்கு மேலும் சிறப்பான ஒன்றாக அமைந்துள்ளதாக சுரேஷ் கூறினார்.

இந்த விருது நிகழ்ச்சியின் வாயிலாகக் கிடைக்கும் புதிய வணிகத் தொடர்புகள், மலேசியாவில் Femi9 நிறுவனத்தின் சந்தையை விரிவுபடுத்துவதுடன், தென்கிழக்காசிய பிராந்தியத்தில் அதன் வளர்ச்சியையும் வலுப்படுத்தும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.