உலு சிலாங்கூர், மார்ச் 15
அரசியல் எல்லைகளைத் தாண்டி மருத்துவத் தொண்டின் மூலம் சமூகத்தின் பேராதரவைப் பெற்றுவரும் டாக்டர் சத்ய பிரகாஷ் நடராஜன், கடந்த வெள்ளிக்கிழமை சமத்துவ நோன்பு துறப்பு நிகழ்ச்சியை நடத்தி அனைவரின் பாராட்டையும் நன்மதிப்பையும் பெற்றார்.
நோன்பு மாதத்தில் அனைத்து மக்களும் ஒற்றுமையாக இணைந்து நோன்பு துறப்பில் கலந்து கொள்ள வேண்டும்; அதில் நமது ஒற்றுமை பிரதிபலிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இந்த நிகழ்ச்சியை அவர் ஏற்பாடு செய்தார்.
விருந்தோம்பலுடன் இலக்கிய நிகழ்ச்சியும் சமூக நலத்திட்டங்களும் ஒருங்கிணைக்கப்பட்ட வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
ரவாங், கோல குபு பாரு, பாதாங் காளி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த இஸ்லாமிய மக்களுக்கு உணவுப் பொருட்களை அன்பளிப்பாக வழங்கியதுடன், திருக்குர்ஆன் நூலையும் வழங்கி நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தினார் டாக்டர் சத்ய பிரகாஷ்.
அதேபோல் சீன சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு பௌத்த சமய நூல்கள், கிறிஸ்துவ சமயத்தைச் சேர்ந்தவர்களுக்கு பைபிள், இந்து சமயத்தைச் சேர்ந்தவர்களுக்கு பகவத் கீதை ஆகியவற்றையும் அன்பளிப்பாக வழங்கினார்.
இதன் மூலம் உலு சிலாங்கூர் மக்கள் அனைத்து சமயங்களையும் கலாச்சாரங்களையும் மதித்து, ஒற்றுமையை விரும்பும் மக்கள் என்பதை சிலர் புரிந்து கொள்ளும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
மேலும், யார் எவ்வாறு கபடநாடகம் ஆடியாலும் மலேசியர்களின் ஒற்றுமையை ஒருபோதும் சிதைக்க முடியாது என்று டாக்டர் சத்ய பிரகாஷ் தெரிவித்தார்.
0 Comments