கோலாலம்பூர், அக் 11-
பட்ஜெட் 2027இல் முதல்முறையாக வீடு வாங்குவோருக்கு முத்திரை வரி விலக்கு உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டிருப்பது மக்களுக்கு பெரும் பயனளிக்கும் என மிம்கோய்ன் தலைவர் டத்தோ பி.வி. அப்துல் ஹமித் தெரிவித்தார்.
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை மக்களவையில் தாக்கல் செய்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், மக்களுக்கு பயனளிக்கும் பல்வேறு திட்டங்களை அறிவித்தார்.
அதன்படி, 500,000 ரிங்கிட் வரை மதிப்புள்ள வீடுகளை முதல்முறையாக வாங்குவோருக்கு கடன் ஒப்பந்தங்கள் மற்றும் சொத்து உரிமை மாற்ற ஆவணங்களுக்கான முத்திரை வரியிலிருந்து முழு விலக்கு வழங்கப்படும்.
மேலும், 750,000 ரிங்கிட் வரை மதிப்புள்ள வீடுகளுக்கும் இந்தச் சலுகை விரிவுபடுத்தப்படும். இதில் முதல் 500,000 ரிங்கிட் மதிப்புக்கு முழு விலக்கும், மீதமுள்ள தொகைக்கு 50 விழுக்காடு விலக்கும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு, முதல் முறையாக வீடு வாங்குவோரின் நிதிச் சுமையைக் குறைக்க உதவும் என டத்தோ அப்துல் ஹமித் குறிப்பிட்டார்.
இதனிடையே, இந்தியச் சமுதாயத்தினருக்கான தெக்குன் மற்றும் அமானா இக்தியார் நிதி ஒதுக்கீடு தலா 150 மில்லியன் ரிங்கிட்டாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், இந்தியச் சமுதாயத்திற்கான மித்ரா நிதி ஒதுக்கீடும் 150 மில்லியன் ரிங்கிட்டாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய திட்டங்கள் இந்தியச் சமுதாயம் உள்ளிட்ட மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் வாழ்வாதார மேம்பாட்டிற்கும் பெரிதும் உதவும் என டத்தோ அப்துல் ஹமித் தெரிவித்தார்.
0 Comments