loader
எண்ணெய் கலப்பு நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த கடுமையான ஆவண நடைமுறைகள் அவசியம்: நிபுணர்

எண்ணெய் கலப்பு நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த கடுமையான ஆவண நடைமுறைகள் அவசியம்: நிபுணர்

கோலாலம்பூர், அக்.10-

எண்ணெய் கலப்பு நடவடிக்கைகள் சட்டத்திற்கு உட்பட்டு, வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறுவதை உறுதிசெய்ய, தேவையான இடங்களில் சுங்கத்துறை தலைமை இயக்குநரின் எழுத்துப்பூர்வ ஒப்புதலைப் பெறுவதுடன், முழுமையான ஆவணங்களையும் பராமரிக்க வேண்டும் என்று கடல்சார் கொள்கை, சட்டம் மற்றும் எல்லை தாண்டிய வர்த்தக நிபுணர் டாக்டர் மட்ஸ்லி ஹருண் வலியுறுத்தினார்.

 

எண்ணெய் இறக்குமதி, சேமிப்பு, கலப்பு மற்றும் மறு ஏற்றுமதி ஆகிய ஒவ்வொரு நடவடிக்கையும் உரிமத்தின் வரம்புக்கும் அதிகாரிகள் விதித்துள்ள நிபந்தனைகளுக்கும் உட்பட்டு மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார்.

 

எண்ணெய் கலப்பு நடவடிக்கைகள் பொருளின் கலவை மற்றும் தரத்தை மாற்றக்கூடும் என்பதால், செயல்முறைக்கு முன்னும் பின்னும் அதன் அளவு, நகர்வு மற்றும் நிலை குறித்த தெளிவான பதிவுகள் அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

இதற்காக ஒப்பந்தங்கள், சரக்குச் சீட்டுகள், சரக்கு விவரப் பட்டியல்கள் உள்ளிட்ட தொடர்புடைய ஆவணங்கள் ஒன்றோடொன்று பொருந்துவதை உறுதிசெய்ய வேண்டும். இதன் மூலம் அறிவிக்கப்பட்ட தகவல்களுக்கும் சரக்கின் உண்மையான நிலைக்கும் இடையே முரண்பாடுகள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும்.

 

சேமிப்புக்காக மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ள வளாகங்களில் எண்ணெய் கலத்தல் அல்லது அதன் தரத்தை மாற்றுதல் போன்ற கூடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்போது, அவை உரிமத்தின் வரம்பு மற்றும் நடைமுறையில் உள்ள விதிமுறைகளுக்கு ஏற்ப உள்ளனவா என்பதை ஆராய வேண்டும் என்றும் அவர் கூறினார்.

 

மேலும், பெறப்பட்ட, சேமிக்கப்பட்ட, கலக்கப்பட்ட மற்றும் ஏற்றுமதி செய்யப்பட்ட எண்ணெயின் அளவைக் கணக்கிட்டு, தொடர்புடைய ஆவணங்களுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்க விரிவான தணிக்கை அவசியம் என்றார்.

 

எல்லை தாண்டிய வர்த்தகத்தில், பொருட்களின் தோற்றம் மற்றும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களின் கீழ் வரிச் சலுகைகளைப் பெறுவதற்கான தகுதி ஆகியவை, பொருட்களின் தோற்ற விதிகள் மற்றும் அதற்கான ஆதார ஆவணங்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

 

மேரிடைம் நெட்வொர்க் நிறுவனம், திரெங்கானு மலேசியா பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடத்திய, மலேசியாவின் பெட்ரோலிய மதிப்புச் சங்கிலியை வலுப்படுத்துதல்மற்றும் ஒழுங்குமுறைச் சூழலில் உள்ள இடைவெளிகளையும் அவற்றுக்கானகாரணிகளையும் கண்டறிதல் என்ற தலைப்பிலான கருத்தரங்கில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

முறையான ஒப்புதல், தெளிவான ஆவண நடைமுறைகள் மற்றும் கடுமையான கண்காணிப்பு ஆகியவை சுங்க அமைப்பின் நேர்மையைப் பாதுகாப்பதுடன், தொழில் நிறுவனங்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையிலான தகராறுகளைக் குறைக்க உதவும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

இதனிடையே, முறையான ஒப்புதல் மற்றும் ஆவணங்கள் இன்றி மேற்கொள்ளப்படும் எண்ணெய் கலப்பு நடவடிக்கைகள் தீவிரமாகக் கருதப்பட வேண்டும் என்று கடல்சார் தொழில் நிபுணர் நசாரி காலித் தெரிவித்தார்.

 

இத்தகைய நடவடிக்கைகள் சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும் என்பதுடன், அவற்றைக் கண்காணிக்கும் அதிகாரிகளின் நேர்மை குறித்தும் கேள்விகளை எழுப்பக்கூடும் என்றார்.

 

இதுபோன்ற சம்பவங்கள் நிகழும்போது, பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா, கண்காணிப்பு எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது, விதிமுறைகள் முறையாக அமல்படுத்தப்படுகின்றனவா என்பது குறித்து கடுமையான கேள்விகள் எழும் என்றும் அவர் கூறினார்.

 

எனவே, எண்ணெய் கலப்பு நடவடிக்கைகள் அனைத்தும் உரிய ஒப்புதல், முறையான ஆவணப் பராமரிப்பு மற்றும் செயல்பாட்டு நிபந்தனைகளுக்கு இணங்க நடைபெறுவதை உறுதிசெய்ய வேண்டும். அத்துடன், சர்வதேச தரநிலைகள் மற்றும் சிறந்த நடைமுறைகளையும் பின்பற்றுவது அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.

0 Comments

leave a reply

Recent News