கோழிப்பண்ணையால் பாதிப்பு: குளத்துவேல்பட்டி கிராமத்தை காப்பாற்ற வேண்டும்!
முதல்வர் உடனடியாக தலையிட வேண்டும் – கிராம மக்கள் கோரிக்கை
காரைக்குடி, செப். 21:
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டம், சாக்கோட்டை ஒன்றியம், சிறுகபட்டி ஊராட்சி, குளத்துவேல்பட்டி கிராமத்தில் கோழிப்பண்ணையால் துர்நாற்றம், ஈக்கள் மற்றும் கோழிக் கழிவுகள் ஏற்பட்டு, தங்கள் வாழ்வாதாரமும், குழந்தைகளின் உடல்நலமும் பாதிக்கப்பட்டுள்ளதாக அக்கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், எங்கள் கிராமத்தில் செயல்பட்டு வரும் கோழிப்பண்ணையால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், அதிகளவில் ஈக்கள் பெருகியுள்ளன. மேலும், கோழிக் கழிவுகள் சாக்கடை உள்ளிட்ட பகுதிகளில் தேங்கி வருவதால், சுற்றுச்சூழல் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக குழந்தைகள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வீடுகளுக்குள் கூட ஏராளமான ஈக்கள் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று அமைதியான முறையில் கோரிக்கை விடுத்தபோதும், தங்களை காவல்துறையினர் கைது செய்து ஒரு நாள் வைத்திருந்த பின்னர் விடுவித்ததாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர்.
மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் தற்போதைய அரசாங்கத்தில் உள்ளவர்களிடம் பலமுறை முறையிட்டும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர்கள் வேதனை தெரிவித்தனர்.
இதனால், தங்களின் இறுதி நம்பிக்கையாக தமிழக முதல்வரிடம் நேரடியாக கோரிக்கை விடுப்பதாக கூறிய கிராம மக்கள்,
“முதல்வர் அவர்களே, எங்கள் கிராமத்தை காப்பாற்றுங்கள். எங்களின் பிரச்சினையை நேரில் கவனித்து, கோழிப்பண்ணையால் ஏற்படும் பாதிப்புகளுக்கு நிரந்தரமான தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். உங்களால் மட்டுமே எங்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறோம்” என்று தெரிவித்தனர்.
0 Comments