loader
எஸ்.பி. மணிவாசகத்திற்கு ‘பெருந்தமிழன் ராஜராஜன்’ உயரிய விருது!

எஸ்.பி. மணிவாசகத்திற்கு ‘பெருந்தமிழன் ராஜராஜன்’ உயரிய விருது!

சென்னை, ஆக. 16:

மலேசியத் தமிழர் கலை, கலாச்சாரம் மற்றும் சமூகப் பணிகளில் ஆற்றிய சிறப்பான பங்களிப்பைப் பாராட்டி, எஸ்.பி. மணிவாசகத்திற்கு ‘பெருந்தமிழன் ராஜராஜன்’ உயரிய விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

 

மல்லை தமிழ் சங்கத்தின் ஏற்பாட்டில், மல்லை சி.ஏ. சத்யா தலைமையில் சென்னையில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில், மலேசியாவைச் சேர்ந்த கலைஞர்கள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சிறப்பு வருகையாளராக மலேசியாவைச் சேர்ந்த டத்தோ டாக்டர் கோபாலகிருஷ்ணன் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தார்.

 

நிகழ்வில் பேசிய மல்லை சத்யா, “மணிவாசகம் எனக்கு பல ஆண்டுகளாகத் தெரிந்தவர். நல்ல மனிதராகவும், அனைவரிடமும் அன்புடன் பழகக்கூடியவராகவும் திகழ்கிறார். மலேசியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்களை ஒன்றிணைக்கும் பணியில் முக்கிய பங்காற்றி வருகிறார்.

 

கலை மற்றும் கலாச்சாரத் துறையிலும் அவர் தொடர்ந்து சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகிறார். குறிப்பாக, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் பெயரைப் போற்றும் வகையில் பல ஆண்டுகளாக நிகழ்ச்சிகளை நடத்தி வருவதுடன், மலேசியாவில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையும் சிறப்பாக நடத்தியுள்ளார்.

 

அவரது நீண்டகால சேவையைப் பாராட்டும் வகையில், மல்லை தமிழ் சங்கத்தின் சார்பில் இந்த உயரிய விருது வழங்கப்படுகிறது. அவரது புகழும் சேவையும் என்றும் நிலைத்திருக்க வேண்டும்” என்றார்.

 

மேலும், மலேசியாவில் இருந்து நிகழ்வில் கலந்து கொண்ட கலைஞர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு நன்றி தெரிவித்த மல்லை சத்யா, டத்தோ டாக்டர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட அனைவரின் வருகைக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

 

விருது பெற்ற எஸ்.பி. மணிவாசகம் பேசுகையில், “எனது முக்கிய நண்பராகவும், நல்ல மனிதராகவும் இருந்து வரும் அண்ணன் சத்யா அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனது சேவையைப் பாராட்டி இந்த உயரிய விருதை வழங்கிய மல்லை தமிழ் சங்கத்திற்கும், அனைவருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

 

தமிழ் மொழி, கலை, கலாச்சாரம் மற்றும் சமூக ஒற்றுமைக்காக தொடர்ந்து பாடுபட்டு வரும் எஸ்.பி. மணிவாசகத்தின் பணியைப் பாராட்டும் வகையில் வழங்கப்பட்ட இந்த விருது, மலேசியத் தமிழர்களின் பங்களிப்பையும் சர்வதேச அளவில் எடுத்துக்காட்டுவதாக அமைந்தது.

0 Comments

leave a reply

Recent News