மலேசியாவில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) தொழில்நுட்பத்தை பாதுகாப்பாகவும் பொறுப்புடனும் பயன்படுத்துவதற்கான புதிய சட்டத்தை உருவாக்கும் பணியில் இலக்கவியல் அமைச்சு முக்கியமான அடுத்த கட்டத்தைத் தொடங்கியுள்ளது.
தேசிய செயற்கை நுண்ணறிவு அலுவலகம் (NAIO) வழி, 2026 ஜூலை மாதம் முழுவதும் பல்வேறு தரப்பினருடன் கலந்தாய்வு அமர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த அமர்வுகளின் நோக்கம், முன்மொழியப்பட்ட AI சட்டம் குறித்து விளக்குவதோடு, அரசு அமைப்புகள், தொழில்துறையினர், கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களின் கருத்துகளையும் கேட்பதாகும்.
சர்வதேச மதிப்பீட்டு அளவுகோல்கள் அடிப்படையிலும், தொழில்நுட்ப ஆய்வுகள் மற்றும் முக்கிய பங்குதாரர்களுடன் முன்னதாக நடைபெற்ற கலந்துரையாடல்களின் அடிப்படையிலும், இந்தக் கலந்தாய்வு அமர்வுகள் கொள்கை உருவாக்கத்தின் முக்கிய கட்டமாக அமைந்துள்ளன.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் தொடர்ச்சியான வளர்ச்சியையும், பல்வேறு துறைகளின் தேவைகளையும் கருத்தில் கொண்டு, அனைவரின் கருத்துகளையும் உள்ளடக்கிய முழுமையான சட்டத்தை உருவாக்க இந்தச் செயல்முறை உதவும்.
AI தொழில்நுட்பம் இன்று கல்வி, சுகாதாரம், வணிகம், அரசுச் சேவைகள் உள்ளிட்ட பல துறைகளில் வேகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் நன்மைகள் அதிகமாக இருந்தாலும், தவறான பயன்பாடு, பாதுகாப்பு, தனியுரிமை மற்றும் பொறுப்புணர்வு போன்ற அம்சங்களும் முக்கியமானவை. அதனால்தான், AI-ஐ பாதுகாப்பாகவும் நம்பகத்தன்மையுடனும் பயன்படுத்த உதவும் சட்டம் ஒன்றை இலக்கவியல் அமைச்சு உருவாக்கி வருகிறது.
இந்தச் சட்டம், AI தொடர்பாக மலேசியாவில் உருவாக்கப்படும் முதல் பொதுவான சட்டக் கட்டமைப்பாக இருக்கும். இது தற்போதுள்ள சட்டங்களை மாற்றுவதற்காக அல்ல. மாறாக, பல்வேறு துறைகளில் AI-ஐ பயன்படுத்துவதற்கான ஒரே மாதிரியான அடிப்படை வழிகாட்டுதல்களை வழங்கும்.
இந்தச் சட்டத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்று, இடர்-அடிப்படையிலான (Risk-Based) அணுகுமுறையாகும். அதாவது, ஒரு AI அமைப்பு ஏற்படுத்தக்கூடிய அபாயத்தின் அளவைப் பொறுத்து, அதற்கான பொறுப்புகளும் பாதுகாப்பு நடவடிக்கைகளும் நிர்ணயிக்கப்படும்.
அதோடு, AI பயன்பாட்டில் ஏற்படும் பிரச்சினைகளைப் பதிவு செய்யும் முறை, பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் புதிய AI தொழில்நுட்பங்களை பாதுகாப்பாகச் சோதிக்க உதவும் AI Sandboxes போன்ற ஏற்பாடுகளும் இதில் இடம்பெறும்.
2026 ஜூன் 24 அன்று நாடாளுமன்றத்தில் பேசிய இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெளிவுபடுத்தியதுபோல், இந்தச் சட்டம் AI வழி உருவாக்கப்படும் உள்ளடக்கங்களை நேரடியாகக் கட்டுப்படுத்துவதற்காக அல்ல. சட்டவிரோதமான அல்லது தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்கள் தொடர்பான நடவடிக்கைகள் தற்போதுள்ள சட்டங்களின் கீழ் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.
2026 ஜூலை 10 முதல், Unified Public Consultation: (UPC) https://upc.mpc.gov.my/ இணையத் தளத்தின் வழி நாடு முழுவதும் பொதுமக்கள், நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் தங்களது கருத்துகள் மற்றும் பரிந்துரைகளைப் பகிர்ந்து கொள்ளலாம். பெறப்படும் அனைத்து கருத்துகளும் சட்ட முன்வரைவு இறுதிப்படுத்தப்படும் முன் பரிசீலிக்கப்படும்.
AI சட்டம் அனைவருக்கும் பயனுள்ளதாகவும், நடைமுறையில் செயல்படுத்தக்கூடியதாகவும் இருப்பதை உறுதிசெய்ய, மக்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது என்று இலக்கவியல் அமைச்சு வலியுறுத்துகிறது. அனைவரின் கருத்துகளையும் மதித்து, வெளிப்படையான முறையில் இந்தச் சட்டம் உருவாக்கப்படும்.
பொறுப்பான AI பயன்பாட்டை ஊக்குவிப்பதன் வழி, மலேசியாவை பாதுகாப்பான, நம்பகத்தன்மை வாய்ந்த மற்றும் உலகளவில் போட்டியிடக்கூடிய AI நாடாக உருவாக்கும் "2030-ஐ நோக்கிய AI நாடு" என்ற தேசிய இலக்கை நோக்கி அரசாங்கம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது என இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ குறிப்பிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments