தமிழ் பள்ளிகளை மூடுவதற்கு பாஸ் (PAS) மற்றும் பெரிக்காத்தான் நேஷனல் (PN) திட்டமிட்டுள்ளதாக பரப்பப்படும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்ற அரசியல் அவதூறு வாக்கு சேகரிக்க டி.ஏ.பி மற்றும் பக்காத்தான் ஹாராப்பான் செய்யும் குறுக்கு புத்தி என சிலாங்கூர் பாஸ் ஆதரவு பேரவையின் (DHPP) தலைவர் ஸ்ரீ ஜலராமன் சுலியாராஜு தெரிவித்துள்ளார். இப்படி தான் தேசிய முன்னணி வெற்றி அடைந்தால் நஜீப் வெளியே வருவார் என அவதூறு பரப்பினார்கள். இப்போது வாக்கு சேகரிக்க இப்படி ஒரு அவதூறை இப்போது ஜொகூர் மாநிலத்தில் சொல்கின்றனர்.
இத்தகைய குற்றச்சாட்டுகளுக்கு எந்தவிதமான உண்மைத் தகவலும், கட்சிக் கொள்கையும் அல்லது தேர்தல் அறிக்கையும் ஆதாரமாக இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்கள், பாஸ் அல்லது பெரிக்காத்தான் நேஷனல் தமிழ் பள்ளிகளை மூட திட்டமிட்டுள்ளதாகக் கூறும் அதிகாரப்பூர்வ ஆவணம், கட்சிக் கொள்கை அல்லது தேர்தல் அறிக்கையை வெளியிட வேண்டும் என்று அவர் சவால் விடுத்துள்ளார்.
அவ்வாறு ஆதாரங்களை சமர்ப்பிக்கத் தவறினால், அந்த குற்றச்சாட்டுகளை உடனடியாகத் திரும்பப் பெற்று, குறிப்பாக இந்திய சமூகத்தினரிடமும், மலேசிய மக்களிடமும் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அரசியலமைப்பின் கீழ் அனைத்து இன மக்களுக்கும் கல்வி பெறும் உரிமையை பாஸ் மதிக்கிறது என்றும், தமிழ்ப்பள்ளிகள் உட்பட எந்த மொழிவழிப் பள்ளியையும் மூடுவதற்கான அதிகாரப்பூர்வ கொள்கையோ முடிவோ பாஸ் கட்சியிடம் ஒருபோதும் இருந்ததில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
அரசியல் லாபத்திற்காக பொய்யான தகவல்களைப் பரப்புவது பொறுப்பற்ற செயல் மட்டுமல்லாமல், நாட்டின் பல்லின ஒற்றுமைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், மக்கள் உண்மையான தகவல்களைப் பெற வேண்டுமே தவிர, அச்சத்தை ஏற்படுத்தும் வகையிலான பொய்ப் பிரச்சாரங்களை அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நீதியையும், பரஸ்பர மரியாதையையும், உண்மையையும் அடிப்படையாகக் கொண்டு அனைத்து சமூகங்களின் உரிமைகளையும் பாதுகாத்து, தேசிய ஒற்றுமையை வலுப்படுத்துவதில் சிலாங்கூர் டிஎச்பிபி தொடர்ந்து உறுதியாக செயல்படும் என்று
ஸ்ரீ ஜலராமன் சுலியாராஜு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
0 Comments