loader
ஜொகூரில் ம.இ.கா போட்டியிடும்  4 தொகுதிகளில் வெற்றி பெற செய்யுங்கள்!  இந்திய மக்களை டான்ஸ்ரீ விக்னேஷ்வரன்  கேட்டுக்கொண்டார்!

ஜொகூரில் ம.இ.கா போட்டியிடும் 4 தொகுதிகளில் வெற்றி பெற செய்யுங்கள்! இந்திய மக்களை டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் கேட்டுக்கொண்டார்!

ஜொகூர், ஜூலை 7 –
ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் ம.இ.கா போட்டியிடும் நான்கு சட்டமன்றத் தொகுதிகளிலும் ம.இ.கா  வெற்றி பெற வேண்டும் என்று மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் வலியுறுத்தினார்.

ஜொகூரில் வாழும் இந்திய மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண, மாநில ஆட்சியில் ம.இ.கா இந்திய சட்டமன்ற உறுப்பினர்கள் அவசியம் என்று அவர் தெரிவித்தார்.

இந்திய சமுதாயத்தின் தேவைகளையும் பிரச்சினைகளையும் நன்கு அறிந்த இந்தியத் தலைவர்களே அவற்றுக்கு சிறந்த தீர்வுகளை முன்வைக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

எனவே, ம.இ.கா-வை பிரதிநிதித்து ஜொகூரில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்களித்து தேர்வு செய்யுங்கள் .

மக்கள், சமூகத்தின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு தங்களது வாக்குகளைப் பதிவு செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இந்தக் கருத்தினை அவர், பெர்லிங் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மஇகாவின் முன்னாள் மூத்த தலைவர்கள், இளைஞர் மற்றும் மகளிர் பொறுப்பாளர்களுடனான கலந்துரையாடல் கூட்டத்தின் போது தெரிவித்தார்.

எதிர்வரும் தேர்தலில் தேசிய முன்னணிக்கு (பாரிசான் நேஷனல்) ஆதரவை வலுப்படுத்துவதையும், மஇகா வேட்பாளரான சகோதரர் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவைத் திரட்டுவதையும் நோக்கமாகக் கொண்டு நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், வேட்பாளர் பன்னீர்செல்வமும் நேரில் கலந்துகொண்டார்.

மேலும், மஇகா தேசிய மகளிர் பிரிவுத் தலைவி திருமதி சரஸ் நல்லதம்பி, மஇகா மூத்த மகளிர் தலைவிகளின் பொறுப்பாளர் திருமதி ஆர். விக்னேஸ்வரி பாபுஜி மற்றும் மத்திய செயற்குழு உறுப்பினர்களும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

பெர்லிங் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட இளைஞர் மற்றும் மகளிர் பொறுப்பாளர்கள் இக்கூட்டத்தில் திரளாகக் கலந்துகொண்டனர். தேசியத் தலைவர் மேற்கொண்ட சூறாவளிப் பயணத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக இந்தக் கலந்துரையாடல் அமைந்தது.

கூட்டத்தில், ஜொகூர் மாநிலத்தில் வாழும் இந்தியர்களின் நலனுக்காக மஇகாவும் தேசிய முன்னணியும் முன்னெடுத்து வரும் திட்டங்கள், அவற்றின் செயல்பாடுகள் மற்றும் மக்களின் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நடவடிக்கைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

-காளிதாசன் இளங்கோவன்

0 Comments

leave a reply

Recent News