கோலாலம்பூர், ஜூலை 6-
இளம் பெண்களும் பல்வேறு துறைகளில் சாதிக்க முடியும் என்பதை உலகிற்கு நிரூபித்துள்ளார் 15 வயதான கேப்டன் தனுஶ்ரீ அன்பரசன். தனது துடிப்பும் திறமையும் கொண்டு கால்பந்து அரங்கில் புதிய வரலாறு படைத்துள்ளார்.
கிளானா ஜெயா PKNS அரங்கில் ஜூன் 28 ஆம் நாள் நடைபெற்ற 16 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான FAM Liga Puteri Cup Final இறுதிப்போட்டியில், Penang Indian FC அணி வீரத்துடன் விளையாடி, Perlima United FC அணியை 3–2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
ஆட்டத்தின் இறுதி நிமிடங்களில் கிடைத்த வாய்ப்புகளைச் சரியாக பயன்படுத்திய பினாங்கு இந்தியன் FC, உறுதியான மனநிலையுடன் ஆட்டத்தின் போக்கையே தம் பக்கம் மாற்றிக்கொண்டது.
இதன் விளைவாக, வெற்றிக் கிண்ணத்துடன் 5,000 வெள்ளி ரொக்கப் பரிசும் அணிக்கு வழங்கப்பட்டது.
இந்தத் தொடரில் கேப்டன் தனுஶ்ரீ அன்பரசன் 7 போட்டிகளில் 15 கோல்கள் அடித்து, லீகாவின் சிறந்த கோல் வீராங்கனையாகத் திகழ்ந்தார்.
கெடா மாநிலம் கூலிம் பகுதியில் உள்ள கலாடி இடைநிலைப் பள்ளியில் கல்வி பயிலும் மாணவியாவார் இவர்.
அணித் தலைவர் ஸ்ரீ சங்கர் கூறுகையில், “இது நீண்ட கால உழைப்பின் பயனும் அர்ப்பணிப்பின் வெளிப்பாடும் ஆகும். தனுஶ்ரீ வெறும் கோல் அடிக்கும் வீராங்கனை அல்ல; முக்கிய தருணங்களில் ஆட்டத்தை மாற்றும் ஆற்றல் கொண்டவர்,” எனப் பெருமிதம் தெரிவித்தார்.
இவ்வாறு, தன் இளமைப் பருவத்திலேயே திறமையால் விளையாட்டு உலகில் முத்திரை பதித்து, பினாங்கு இந்தியன் FC அணிக்கு மகுடம் சூட்டியுள்ளார் கேப்டன் தனுஶ்ரீ அன்பரசன்.
0 Comments