loader
ஆலயத்தைப் பாதுகாக்க முதலமைச்சர் ஜோசப் விஜய் தீர்வு காண வேண்டும் என கோரிக்கை.

ஆலயத்தைப் பாதுகாக்க முதலமைச்சர் ஜோசப் விஜய் தீர்வு காண வேண்டும் என கோரிக்கை.

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே உள்ள உஞ்சனை கிராமத்தில் அமைந்துள்ள பல நூற்றாண்டுகள் பழமையான, வரலாற்று மற்றும் ஆன்மிகச் சிறப்புமிக்க திருவோண சக்கரவர்த்தியார் ஆலயம் தற்போது பராமரிப்பின்றி புதர்கள், செடி, கொடிகள் மண்டிக் கிடக்கும் நிலையில் இருப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இந்த ஆலயத்தை சீரமைக்க வேண்டும் என, கடந்த காலத்தில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின்போது அன்றைய முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின்போது அன்றைய முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும், ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்த ஆலயம் சக்தி வாய்ந்ததும், வரலாற்றுச் சிறப்புமிக்கதும் ஆகும். இங்கிருந்து பசும்பால் அக்காலத்தில் புதுக்கோட்டைக்கு கொண்டு செல்லப்பட்டதாக கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆலயத்தின் முன்புறத்தில் குளமும், பின்புறத்தில் மயானமும் அமைந்துள்ளன. மேலும், ஆலயத்தைச் சுற்றி முருகப்பெருமான் உள்ளிட்ட பல தெய்வங்களின் சிலைகள் உள்ளன. அவை அனைத்தும் தற்போது காடு மண்டி மறைந்துள்ளதால், உடனடியாக சுத்தம் செய்து பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

உஞ்சனை கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருவதால், இந்த ஆலயம் சீரமைக்கப்பட்டால் பக்தர்களுக்கும், கிராம மக்களுக்கும் பெரும் பயனளிக்கும். கண்டதேவி ஆலயத்தைப் போல, உஞ்சனை திருவோண சக்கரவர்த்தியார் ஆலயமும் புகழ்பெற்ற திருத்தலமாக வளர வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

எனவே, தமிழக முதலமைச்சர் மற்றும் அறநிலையத் துறை அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு ஆலயத்தை முழுமையாக சீரமைத்து பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என உஞ்சனை பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் தொழிலதிபர்கள் இணைந்து கோரிக்கை விடுத்துள்ளனர்.

-முருகன்

0 Comments

leave a reply

Recent News