loader
6ஆவது தேசிய பொருளாதார மாநாடு: அரசின் பட்ஜெட்டுக்கு முன் பரிந்துரைகள் சமர்ப்பிக்கும் வர்த்தக சம்மேளனம்! -டத்தோஸ்ரீ கோபாலகிருஷ்ணன்

6ஆவது தேசிய பொருளாதார மாநாடு: அரசின் பட்ஜெட்டுக்கு முன் பரிந்துரைகள் சமர்ப்பிக்கும் வர்த்தக சம்மேளனம்! -டத்தோஸ்ரீ கோபாலகிருஷ்ணன்

கோலாலம்பூர்,ஜூலை 2-
மலேசிய தேசிய வர்த்தக மற்றும் தொழில்துறை சம்மேளனம் (National Chamber of Commerce and Industry of Malaysia – NCCIM) ஏற்பாடு செய்த 6ஆவது தேசிய பொருளாதார மாநாடு இன்று சிறப்பாக நடைபெற்றது.

நாட்டின் ஐந்து முக்கிய வர்த்தக சம்மேளனங்கள் இணைந்து இந்த மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தன.

மாநாட்டை பொருளாதார துணை அமைச்சர் லியு சின் தோங் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார். இதில் தொழில்துறையினர், வர்த்தகர்கள், பொருளாதார நிபுணர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

தேசிய வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் டத்தோஸ்ரீ கோபாலகிருஷ்ணன் உரையாற்றுகையில், தேசிய வர்த்தக மற்றும் தொழில்துறை சம்மேளனத்தில் தற்போது 630-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளதாகவும், அவர்களில் சுமார் 150 பேர் இந்திய தொழில்முனைவோர்கள் என்றும் தெரிவித்தார்.

இந்த தேசிய பொருளாதார மாநாடு ஆறாவது முறையாக நடைபெறுவதாகக் குறிப்பிட்ட அவர், நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை, உலகளாவிய பொருளாதாரச் சவால்கள், போர் காரணமாக ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்புகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் மாநாட்டில் விரிவாக ஆய்வு செய்யப்படுவதாகக் கூறினார்.

மாநாட்டில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகளின் அடிப்படையில், நாட்டின் பொருளாதாரத்தை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு கொண்டு செல்லும் வகையிலான பரிந்துரைகள் மற்றும் செயல் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் விளக்கமளித்தார்.

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபரில் தேசிய வரவு-செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாகவே இந்த தேசிய பொருளாதார மாநாடு நடத்தப்படுவது வழக்கமாக இருப்பதாகவும், மாநாட்டில் முன்வைக்கப்படும் பரிந்துரைகளில் பலவற்றை அரசு இதுவரை ஏற்றுக்கொண்டு செயல்படுத்தி வருவதாகவும் டத்தோஸ்ரீ கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

அரசு இந்த மாநாட்டுக்கு தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வருவதற்கான சான்றாகவே பொருளாதார துணை அமைச்சர் நேரில் கலந்து கொண்டு மாநாட்டைத் தொடக்கி வைத்துள்ளார் என்றும் அவர் கூறினார்.

மேலும், இந்திய சமூகத்தின் பொருளாதார மேம்பாட்டை மையமாகக் கொண்ட தனித்துவமான பொருளாதார மாநாட்டை இந்த ஆண்டுக்குள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக மாநாட்டின் ஏற்பாட்டுக் குழு தலைவர் டத்தோ டாக்டர் ஏ.டி.குமரராஜா தெரிவித்தார்.

இந்த மாநாட்டை மைக்கி (MAICCI) உள்ளிட்ட இந்திய வர்த்தக மற்றும் பொதுநல அமைப்புகளுடன் இணைந்து நடத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த மாநாட்டின் மூலம் அரசுக்கும் தனியார் துறைக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தி, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பயனுள்ள கொள்கைப் பரிந்துரைகளை வழங்குவதே முக்கிய நோக்கமாகும் என அவர் வலியுறுத்தினார்.

0 Comments

leave a reply

Recent News