loader
ஜொகூர் இந்திய சமூக முன்னேற்றத்திற்காக 10 பரிந்துரைகளை முன்வைத்தது டிரா மலேசியா!

ஜொகூர் இந்திய சமூக முன்னேற்றத்திற்காக 10 பரிந்துரைகளை முன்வைத்தது டிரா மலேசியா!

கோலாலம்பூர், ஜூன் 25-
ஜொகூர் மாநிலத்தில் வசிக்கும் இந்திய சமூகத்தின் சமூக, கல்வி, பொருளாதார மற்றும் தலைமைத்துவ முன்னேற்றத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் டிரா மலேசியா 10 முக்கிய பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.

கடந்த சில தசாப்தங்களில் தோட்டப்புறங்களில் வாழ்ந்த பெரும்பாலான இந்தியர்கள் நகர்ப்புற மற்றும் புறநகர் பகுதிகளுக்கு இடம்பெயர்ந்ததன் மூலம் கல்வி, தொழில்நுட்பம், வணிகம், தொழில்முனைவு, பொது சேவை மற்றும் அரசியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனையாளர்கள் உருவாகியுள்ளதாக டிரா மலேசியா தெரிவித்துள்ளது.

எனினும், சமூகத்தின் ஒரு பகுதியினர் இன்னும் நகர்ப்புற வறுமை, கல்வி இடைநிறுத்தம், வேலைவாய்ப்பின்மை, குடியுரிமை மற்றும் அடையாள ஆவணப் பிரச்சினைகள், போதைப்பழக்கம், சமூகச் சீர்கேடுகள் மற்றும் பொருளாதார வாய்ப்புகளின் பற்றாக்குறை போன்ற சவால்களை எதிர்கொண்டு வருவதாக அது சுட்டிக்காட்டியுள்ளது.

இதனைக் கருத்தில் கொண்டு, ஜொகூரில் 4 மக்கள் சேவை மையங்களை உருவாக்குதல், தொழில்முனைவோர் மற்றும் வணிக வளர்ச்சிக்கான வாய்ப்புகளை அதிகரித்தல், வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்திறன் பயிற்சிகளை விரிவுபடுத்துதல், மலிவு விலை வீட்டு வசதி மற்றும் வீட்டுரிமைத் திட்டங்களை மேம்படுத்துதல் ஆகிய பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அத்துடன், அனைவருக்கும் தரமான கல்வியை உறுதிப்படுத்துவதோடு தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்கு கூடுதல் கவனம் செலுத்துதல், குடியுரிமை மற்றும் அடையாள ஆவணப் பிரச்சினைகளுக்குத் துரித தீர்வு காணுதல், அரசாங்கக் குழுக்கள், அரசாங்க இணை நிறுவனங்கள் மற்றும் உள்ளாட்சி மன்றங்களில் இந்தியர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரித்தல் போன்ற அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.

மேலும், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் சமூக அமைப்புகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகளை வழங்குதல், இளைஞர்கள், பெண்கள் மற்றும் குடும்பங்களின் நலனை மேம்படுத்தும் திட்டங்களை செயல்படுத்துதல், மாநில அளவில் சமூக மேம்பாட்டு குழுவொன்றை அமைத்து அனைத்து முன்னெடுப்புகளையும் ஒருங்கிணைத்து கண்காணித்தல் ஆகிய பரிந்துரைகளையும் டிரா மலேசியா வலியுறுத்தியுள்ளது.

இந்த பரிந்துரைகள் வெறும் வாக்குறுதிகளாக அல்லாமல், நடைமுறைப்படுத்தக்கூடிய சமூக மேம்பாட்டுத் திட்டங்களாக உருவாக்கப்பட்டுள்ளதாக டிரா மலேசியா தெரிவித்துள்ளது.

அதேவேளை, இத்திட்டங்கள் வெற்றிபெற மக்களின் பங்களிப்பும் அவசியம் எனக் குறிப்பிட்டுள்ள டிரா மலேசியாவின் தலைவர் டத்தோ சரவணன், குறிப்பாக இளைஞர்கள், பெண்கள் மற்றும் முதல் முறையாக வாக்களிப்பவர்கள் தங்களது வாக்குரிமையின் சக்தியைப் பயன்படுத்தி சமூக தேவைகளை அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

0 Comments

leave a reply

Recent News