loader
இந்தியாவில் கைது செய்யப்பட்ட “கேங் ரமேஸ்” தலைவன் மலேசியாவிற்கு கொண்டுவரப்பட்டார்!

இந்தியாவில் கைது செய்யப்பட்ட “கேங் ரமேஸ்” தலைவன் மலேசியாவிற்கு கொண்டுவரப்பட்டார்!

கோலாலம்பூர், மே 26–

சுங்கை பெட்டாணி எஸ்.ஜி டிவிசன் பகுதியில் செயலில் இருந்த “கேங் ரமேஸ்” எனப்படும் திட்டமிட்ட குற்றக் குழுவின் தலைவர் என சந்தேகிக்கப்படும் நபரை மலேசிய அரச போலீஸ் ( PDRM) கைது செய்துள்ளது.

குற்றச்செயல்களுக்கு எதிராக நடத்தப்பட்ட  “ஒப் திகா” நடவடிக்கையின் கீழ் கடந்த மே 22ஆம் தேதி அன்று இந்தியா மற்றும் தாய்லாந்து அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் அந்த  சந்தேகநபர் கைது செய்யப்பட்டார் என புக்கிட் அமான் குற்றப்புலனாய்வு துறை இயக்குநர் டத்தோ எம். குமார் தெரிவித்துள்ளார்.

தாய்லாந்தின் பெங்காக்கிலிருந்து இந்தியாவின் ஹைதராபாத் நோக்கி சென்ற விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது அவர் கைது செய்யப்பட்டதாகவும், பின்னர் மலேசியாவிற்கு அழைத்து வரப்பட்டதாகவும் அவர் கூறினார்.

சுங்கை பெட்டாணி மஜிஸ்திரேட் நீதிமன்றம் பிறப்பித்த கைது வாரண்டின் அடிப்படையிலும், உளவுத்துறையின் (இன்டர்போல்) சிவப்பு அறிவிப்பு (Red Notice) இருந்ததாலும் அந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

இதனிடையே கைது செய்யப்பட்ட நபர் திட்டமிட்ட குற்றக் குழுவில் உறுப்பினராக செயல்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறார். இதுகுறித்து குற்றவியல் சட்டம் பிரிவு 130V கீழ் விசாரணை நடத்தப்படுகிறது என்று இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

இந்த பிரிவின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் குறைந்தது ஐந்து ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என்றும் அவர் கூறினார்.

மேலும், வரும் மே 29ஆம் தேதி வரை தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள  சந்தேகநபர் மீது, 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் கெடா மாநிலத்தின் படாங் செராய் மற்றும் பெடோங் பகுதிகளில் இடம்பெற்ற இரண்டு தனித்தனி கொலை வழக்குகள் தொடர்பாக குற்றவியல் சட்டம் பிரிவு 302 கீழும் விசாரணை நடைபெற்று வருகிறது.

சம்பந்தப்பட்ட சந்தேகநபரை கண்டறிந்து கைது செய்ய இந்தியா மற்றும் தாய்லாந்து அதிகாரிகள் வழங்கிய நெருங்கிய ஒத்துழைப்புக்கு நாங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என டத்தோ எம். குமார் கூறினார்.

0 Comments

leave a reply

Recent News