கோலாலம்பூர், மே 22 –
Pertubuhan Bitara Wawasan இயக்கத்தின் ஏற்பாட்டில், தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான நினைவாற்றல் மற்றும் தன்னம்பிக்கை மேம்பாட்டு பயிலரங்கம் இரண்டு நாட்கள் குயில் ஜெயபக்தி மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த பயிலரங்கில் பல தமிழ்ப்பள்ளிகளில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 62 மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
ரவாஙைச் சேர்ந்த Achievers Mind Academy மற்றும் அதன் அரசு சாரா இயக்க குழுவினர் இந்த நிகழ்ச்சியை திறம்பட வழிநடத்தினர்.
மாணவர்களின் தன்னம்பிக்கை வளர்ச்சி, மேடைப் பேச்சுத் திறன், பயமின்றி கருத்துகளை வெளிப்படுத்தும் திறன் ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்கில் இந்த பயிற்சி நடத்தப்பட்டது.
தெளிவான கருத்தமைப்பு, பேச்சை ஒழுங்குபடுத்துதல், கதை சொல்லும் திறன், நம்பிக்கையுடன் உரையாற்றுதல் போன்ற பல அம்சங்கள் பயிற்சியில் கற்பிக்கப்பட்டன.
பயிலரங்கின் நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் குயில் பத்திரிகை ஆசிரியரும் ஜெய பக்தி நிறுவன இயக்குநருமான டத்தோ டாக்டர் கு.செல்வராஜு தலைமை ஏற்று உரையாற்றி, மாணவர்களுக்கு பயிற்சி சான்றிதழ்களை வழங்கினார்.
மேலும் செந்தூல் முத்தக படிபகம் தலைவர் பி. இராமன், பிந்தாரா வாவாசன் இயக்கத் தலைவர் ஆசிரியர் சுப்ரமணியம், Achievers Mind Academy நிறுவனர் மாஸ்டர் அழகன் கோவிந்தன், டத்தோ டாக்டர் சமரான் ரத்தினம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
நிறைவு நிகழ்வில் மாணவர்கள் தாங்கள் கற்றுக்கொண்ட பேச்சுத் திறன்களை மேடையில் வெளிப்படுத்தி, பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றனர்.
0 Comments