கோலாலம்பூர், மே 25 –
மஇகாவின் 80ஆம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி, பல்வேறு நிகழ்ச்சிகள் தேசிய அளவில் நடைபெற்று வருவதாக மஇகா தேசிய உதவித் தலைவர் டத்தோ முருகையா தெரிவித்தார்.
இம்மாதம் 21ஆம் தேதி மஇகாவின் 80ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நாடு தழுவிய அளவில் கூட்டு பிரார்த்தனை நிகழ்ச்சி நடைபெற்றதாகவும், அதில் கலந்து கொண்ட அனைவருக்கும் அவர் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
மேலும், இம்மாதம் 31ஆம் தேதி மஇகாவின் மாபெரும் குடும்ப தின விழா நாடு முழுவதும் உள்ள 150 தொகுதிகளில் நடைபெறவுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த விழாவிற்கான பரிசுப் பொருட்கள் அனைத்தும் நேற்று சம்பந்தப்பட்ட தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுவிட்டதாகவும்
மூவின மக்களும் இணைந்து கலந்து கொள்ளும் வகையில் இந்த குடும்ப தின விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இது கட்சியின் அடிப்படையில் நடத்தப்படும் நிகழ்ச்சி அல்ல என்றும், கட்சி பாராமல் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம் என்றும் அழைப்பு விடுத்தார்.
இந்த குடும்ப தின விழா மூலம் மக்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளவும், ஒற்றுமை உணர்வை வலுப்படுத்தவும் வாய்ப்பு உருவாகும் என அவர் குறிப்பிட்டார்.
விழாவில் இசை நாற்காலி, பூர்வகுடி மக்களின் “சும்பிட்”, சீனர்களின் “சும்பா” விளையாட்டு, கயிறு இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் இடம்பெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அதேவேளை, வரும் ஜூன் 7ஆம் தேதி மஇகா சார்பில் நாடு தழுவிய அளவில் மருத்துவ முகாம் நடத்தப்படவுள்ளதாகவும், அது 150 மஇகா தொகுதிகளிலும் நடைபெறும் என்றும் கூறினார்.
மக்களின் உடல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை முன்னிறுத்தியே இந்த மருத்துவ முகாம் நடத்தப்படுவதாக அவர் விளக்கமளித்தார்.
மஇகாவின் 80ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நடைபெறும் ஏழு முக்கிய நிகழ்ச்சிகளிலும் மூவின மக்களும் கலந்து கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே, குடும்ப தின விழா பொறுப்பாளர் டத்தோ மோகனா கூறுகையில், மஇகாவின் 80ஆம் ஆண்டு விழா நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
வரும் மே 31ஆம் தேதி காலை 7.30 மணி முதல் குடும்ப தின விழா நடைபெறும் என்றும், இது மிகப்பெரிய அளவில் நடத்தப்படும் நிகழ்வாக அமையும் என்றும் அவர் கூறினார்.
மஇகா தொடர்ந்து மக்களுடன் இணைந்து செயல்பட்டு வருவதை இந்த விழா எடுத்துக்காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
0 Comments