loader
கோலாலம்பூரிலிருந்து லண்டன் வரை... ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிளில் 25 நாடுகளுக்கு 24,700 கிலோ மீட்டர் பயணம்!  சுதந்திர தினத்தை முன்னிட்டு டத்தோ ஆனந்தின் அடுத்தக்கட்ட சாதனை!

கோலாலம்பூரிலிருந்து லண்டன் வரை... ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிளில் 25 நாடுகளுக்கு 24,700 கிலோ மீட்டர் பயணம்! சுதந்திர தினத்தை முன்னிட்டு டத்தோ ஆனந்தின் அடுத்தக்கட்ட சாதனை!

கோலாலம்பூர்,மே 25-
கோலாலம்பூரில் இருந்து லண்டன் வரை மோட்டார் சைக்கிளில் சாகசப் பயணம் மேற்கொள்ளும் மலேசிய தமிழரான டத்தோ ஆனந்தன், இன்று தனது “MERDEKA RIDE - 2026” பயணத்தை உற்சாகமாகத் தொடங்கினார்.

மலேசியாவின் 2026 ஆம் ஆண்டு மெர்டேக்கா தினத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் இந்த அசாதாரண முயற்சியில், சுமார் 24,700 கிலோ மீட்டர் தூரத்தை 100 நாட்களுக்குள் கடக்க அவர் திட்டமிட்டுள்ளார்.

தாய்லாந்து, லாவோஸ், சீனா, கசகஸ்தான், ஜியார்ஜியா, துருக்கி, பல்கேரியா, ருமேனியா, ஆஸ்திரியா, ஹங்கேரி, சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், பெல்ஜியம், ஹாலந்து, அயர்லாந்து உள்ளிட்ட 25 நாடுகள் வழியாக இந்தப் பயணம் நடைபெறவுள்ளது.

நகர சாலைகள் மட்டுமின்றி, மண் பாதைகள், காட்டு வழிகள், ஆறுகள் மற்றும் சேறு சகதிப் பகுதிகளையும் கடந்து செல்லும் இந்த சாகசப் பயணம் பெரும் சவாலாக பார்க்கப்படுகிறது.

இடது முழங்காலில் காயம் இருந்தபோதிலும், ஆனந்தன் தனது உறுதியையும் ஆர்வத்தையும் இழக்காமல் பயணத்தைத் தொடங்கியுள்ளார்.
மெர்டேக்கா தினமான ஆகஸ்ட் 31 அன்று லண்டனில் உள்ள மலேசிய தூதரகத்தில் நடைபெறும் தேசிய தினக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதே அவரது முக்கிய இலக்காகும்.

“SHADOWFOX” எனும் மோட்டார் சைக்கிள் சாகசக் குழுவை வழிநடத்தி வரும் ஆனந்தன், இதற்கு முன்பு சென்னை நோக்கி சர்வதேச சாகசப் பயணமும், நாட்டின் பல பகுதிகளை இணைக்கும் தேசிய அளவிலான பயணங்களையும் மேற்கொண்டுள்ளார்.

கொரோனா காலத் தடைகளுக்குப் பின்னர் தற்போது மூன்றாவது பெரிய சாகச முயற்சியாக லண்டன் பயணத்தைத் தொடங்கியுள்ளார்.

இந்த சாகசப் பயணத்தை மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தொடக்கி வைத்தார். நிகழ்ச்சியில் முன்னாள் செனட்டர் டத்தோ சி. சிவராசா, மஇகா தேசிய ஊடகப் பிரிவு தலைவர் எல். சிவசுப்பிரமணியன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

மேலும், நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான மோட்டார் சைக்கிள் சாகச வீரர்கள் ஒன்று கூடி, டத்தோ ஆனந்தனை வாழ்த்தி உற்சாகமாக வழியனுப்பினர்.

0 Comments

leave a reply

Recent News