கோலாலம்பூர்,மே 18-
மலேசிய இந்திய வர்த்தக மற்றும் தொழில் சங்கத்தின் (MAICCI) தலைவர் டத்தோ ஸ்ரீ கோபாலகிருஷ்ணன், “MAICCI – MUDRA Roadshow 2026” என்ற திட்டத்தை நாடு முழுவதும் நடத்தப்படவுள்ளதாக அறிவித்தார்.
இந்த திட்டம், தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சின் (KUSKOP) கீழ் செயல்படுத்தப்படும் MUDRA 2026 பொருளாதார ஊக்கத் திட்டத்தின் ஓர் முக்கிய முயற்சியாகும்.
இந்த திட்டத்தின் கீழ் இதுவரை வெ.220 மில்லியன் மானியம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை மைக்கி முழுமையாக வரவேற்பதாக அவர் மேலும் கூறினார்.
இந்த ரோட்ஷோ மூலம் நாடு முழுவதும் உள்ள 3,000-க்கும் மேற்பட்ட இந்திய தொழில்முனைவோர்களுக்கு நிதி உதவி, பயிற்சி, தொழில் வளர்ச்சி வாய்ப்புகள் மற்றும் வணிக வலையமைப்பு தொடர்பான தகவல்கள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும், சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், இளைஞர் தொழில்முனைவோர், பெண்கள் தொழில்முனைவோர் மற்றும் இந்திய கூட்டுறவுச் சங்கங்களை அணுகும் முக்கிய தளமாக இந்த திட்டம் அமையும் எனவும் டத்தோ ஸ்ரீ கோபாலகிருஷ்ணன் கூறினார்.
இந்த திட்டத்தின் முதல் நிகழ்ச்சி கடந்த மே 10ஆம் தேதி புக்கிட் மெர்தாஜாம், பினாங்கில் நடைபெற்றது. தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் ஸ்டீவன் சிம் நிகழ்ச்சியை தொடக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சிக்கு உள்ளூர் தொழில்முனைவோர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததாகவும், MUDRA திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதி மற்றும் தொழில் மேம்பாட்டு வாய்ப்புகள் குறித்து பலர் ஆர்வம் காட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள வெ.220 மில்லியனில் இதுவரை வெ.70 மில்லியன் தொழில் முனைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த மானியத்திற்கு விண்ணப்பம் செய்வதற்கு தொழில் முனைவர்களுக்கு மைக்கி உதவி செய்யவும் தயாராக உள்ளதாக அவர் சொன்னார்.
0 Comments