loader
சிரம்பானை அதிரவைத்த ‘ஸ்மார்ட் ரைடர்ஸ்’ மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் ஒன்று கூடல்! மலேசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது!

சிரம்பானை அதிரவைத்த ‘ஸ்மார்ட் ரைடர்ஸ்’ மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் ஒன்று கூடல்! மலேசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது!

சிரம்பான், மே 16 —

நாடு முழுவதிலிருந்தும் வந்த சுமார் 300 மோட்டார் சைக்கிள் ஓட்டிகள் கலந்து கொண்ட “ஸ்மார்ட் ரைடர்ஸ்” தேசிய ஒன்று கூடல் நேற்று இரவு சிரம்பானில் கோலாகலமாக நடைபெற்றது.

ஸ்மார்ட் ரைடர்ஸ் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வு, சிரம்பான் காடோங் ஜெயாவில் உள்ள பெட்ரோன் பெட்ரோல் நிலையத்தில் தொடங்கியது. அங்கு ஒன்று திரண்ட பைக்கர்கள் அணிவகுத்து ஊர்வலமாக பயணித்து, பின்னர் View Park Restaurant-இல் “தேநீர் ஒன்று கூடல்” நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட மஇகாவின் தேசிய விளையாட்டுப் பிரிவின் தலைவர் எண்ட்ரு, மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களின் பொறுப்பு, கட்டுப்பாடு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து உரையாற்றியதுடன், பங்கேற்ற அனைவரையும் வரவேற்றார்.

டத்தோ பாலன் நாயர் தலைமையில் நடைபெற்ற இந்த ஒன்று கூடல், மாநில மற்றும் வட்டார அளவுகளில் செயல்பட்டு வரும் சிறு பைக்கர் குழுக்களை தேசிய ரீதியில் ஒன்றிணைக்கும் நோக்கத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டதாக எண்ட்ரு தெரிவித்தார்.

மேலும், உறுப்பினர்கள் தங்களது பயண அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும், எதிர்காலத்தில் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளில் ஈடுபடவும் இந்த நிகழ்வு வழிவகுத்ததாக அவர் கூறினார்.

ஒரே இடத்தில் 300-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள் ஓட்டிகள் ஒன்று கூடிய இந்த நிகழ்வு மலேசிய சாதனைப் புத்தகத்திலும் இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

நிகழ்வின் சிறப்பம்சமாக, சு. கதிரவன் கௌரவிக்கப்பட்டார். அவர் 109 நாடுகளில் 2,08,941 கிலோமீட்டர் தூரம் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்து சாதனை படைத்துள்ளார்.

புவி வெப்பமாதல் மற்றும் வன பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், தனது 62-ஆவது வயதில் 2023 ஜனவரி 2ஆம் தேதி தொடங்கிய இந்த உலகப் பயணத்தை, 65 வயதில் இந்த ஆண்டு மே 9ஆம் தேதி வெற்றிகரமாக நிறைவு செய்தார். பயணத்தின் போது பல்வேறு நாடுகளில் 190 மரங்களை நட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் அவர் பங்களித்துள்ளார்.

0 Comments

leave a reply

Recent News