கோல சிலாங்கூர், மே 16 -
கெஅடிலான் கட்சியின் கோல சிலாங்கூர் கிளையின் ஆண்டு பொதுக்கூட்டத்தில், கிளைத் தலைவர் எம். சிவபாலனை எதிர்த்து கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பாக ஏற்ப்பட்ட சர்ச்சையை தொடர்ந்து அங்கு சலசலப்பு ஏற்ப்பட்டது.
கூட்டம் முடிந்து சுமார் 20 நிமிடங்களுக்குப் பிறகு, ஒரு குழுவினர் மீண்டும் மண்டபத்திற்குள் நுழைந்து, சிவபாலனை எதிர்த்த நம்பிக்கையில்லா தீர்மானம் ஏன் விவாதிக்கப்படவில்லை அல்லது வாக்கெடுப்புக்கு விடப்படவில்லை என விளக்கம் கோரியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கிளைத் தலைவர் எம். சிவபாலன் கூறுகையில், அந்த தீர்மானம் ஏற்கப்பட்டாலும், அது கட்சியின் மத்திய தலைமையிடம் பரிசீலனைக்காக அனுப்பப்படும் என முன்மொழிந்தவர்களிடம் தெரிவிக்கப்பட்டதாக கூறினார்.
அவர்கள் அதைப் பற்றி விவாதிக்க வேண்டும் என்றனர். ஆனால் இது ஒரு தீர்மானம் மட்டுமே. அதனை வாக்கெடுப்புக்கு விட முடியாது. அது கட்சியின் உயர்மட்ட தலைமையிடம் கொண்டு செல்லப்பட வேண்டும்,” என்று அவர் தெரிவித்தார்.
அந்த தீர்மானத்தில் இரண்டு அம்சங்கள் இடம்பெற்றிருந்ததாகவும், ஒன்று தனக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மற்றும் மற்றொன்று கிராமத் தலைவர்களின் நியமனம் தொடர்பானதாகவும் அவர் கூறினார்.
“இந்த இரண்டு விவகாரங்களும் கிளை மட்டத்தில் முடிவு செய்யக்கூடியவை அல்ல. நம்பிக்கையில்லா தீர்மானம் கட்சியின் உயர்மட்ட தலைமையிடம் அனுப்பப்பட வேண்டும். கிராமத் தலைவர்களை நியமிப்பதும் எங்கள் அதிகார வரம்பிற்குள் இல்லை,” என்றார்.
இந்த பரபரப்பில் மூன்று பெண் உறுப்பினர்கள் காயமடைந்ததாகவும், சம்பவம் தொடர்பாக போலீஸ் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் சிவபாலன் தெரிவித்தார்.
மேலும், ஆண்டு பொதுக்கூட்டத்திற்கு முன்பாக தமக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும், அதுதொடர்பாக நேற்று தனியாக போலீஸ் புகார் செய்ததாகவும் அவர் கூறினார்.
இதற்கிடையில், கெஅடிலான் பொதுச் செயலாளர் ஃபுசியா சாலே சம்பவத்தை உறுதிப்படுத்தியதுடன், “கோல சிலாங்கூர் கிளை கூட்டம் கட்சியின் அரசியலமைப்புக்கு ஏற்ப சுமூகமாகவும் சட்டபூர்வமாகவும் நடைபெற்றது” என்றார்.
கடந்த சில வாரங்களாக, கிளைத் தேர்தலைத் தொடர்ந்து ஏற்பட்ட உள்கட்சி பதற்றங்களால் கெஅடிலான் கோல சிலாங்கூர் கவனத்தை ஈர்த்திருந்தது.
0 Comments