loader
PPR வீட்டு வாடகை பாக்கியை கட்டுவதற்கு கால அவகாசம் வழங்க வேண்டும்! டத்தோ டாக்டர் லோகபாலா வேண்டுகோள்!

PPR வீட்டு வாடகை பாக்கியை கட்டுவதற்கு கால அவகாசம் வழங்க வேண்டும்! டத்தோ டாக்டர் லோகபாலா வேண்டுகோள்!

கோலாலம்பூர், மே 15 –

வருமான பாதிப்பால் பிபிஆர் வீடுகளில் வசித்து வரும் குறைந்த வருமான மக்களுக்கு, வீட்டு வாடகை பாக்கியை செலுத்த கால அவகாசம் வழங்க வேண்டும் என்று பிபிபி கட்சியின் தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா கேட்டுக் கொண்டுள்ளார்.

பொருளாதார சிக்கல்களால் அவதிப்பட்டு வரும் பலர், தங்களது வீட்டு வாடகை கட்டணங்களை முறையாக செலுத்த முடியாத நிலையில் உள்ளனர். இதனால், வாடகை பாக்கி தொகை பல லட்சம் வெள்ளியை எட்டியுள்ளது.

இந்த சூழ்நிலையில், வாடகை பாக்கி காரணமாக சம்பந்தப்பட்ட குடும்பங்களின் வீடுகள் பூட்டப்படும் அபாயம் இருப்பதால், அவர்கள் மேலும் கடுமையான சுமையையும் நெருக்கடியையும் எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவர் கூறினார்.

எனவே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாக்கி தொகையை படிப்படியாக செலுத்துவதற்கான வாய்ப்பை டிபிகேஎல் வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

“உதாரணமாக, ஒருவர் RM5,000 வாடகை பாக்கி வைத்திருந்தால், முதற்கட்டமாக 25 விழுக்காடு தொகையை செலுத்த அனுமதி வழங்கலாம். பின்னர், மாதாந்திர வாடகை கட்டணத்துடன் கூடுதலாக ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தும் முறையை பரிசீலிக்க வேண்டும்,” என்று அவர் தெரிவித்தார்.

இவ்வாறு செயல்பட்டால், வாடகை பாக்கி பிரச்சனைக்கு ஒரு நல்ல தீர்வு காண முடியும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

இந்த விவகாரம் தொடர்பாக டத்தோ பண்டாருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும், அதனை பரிசீலிப்பதாக அவர் உறுதியளித்துள்ளதாகவும் டத்தோ டாக்டர் லோகபாலா கூறினார்.

மேலும், இந்த தருணத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்கும் பணியில், விலாயா மாநில பிபிபி கட்சியின் தலைவர் சத்யா சுதாகரன் தலைமையில் தொகுதி தலைவர்கள் மற்றும் மகளிர் அணியினர் களமிறங்கி செயல்பட்டு வருவது மிகவும் பாராட்டுக்குரியது என்றும் அவர் குறிப்பிட்டார்.

“வாடகை பாக்கி பிரச்சனையால் அனைத்து இன மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இனம், மதம், மொழி பாராமல், வசதி குறைந்த மக்களுக்கு பிபிபி கட்சி எப்போதும் அரணாக இருக்கும்,” என்று டத்தோ டாக்டர் லோகபாலா தெரிவித்தார்.

0 Comments

leave a reply

Recent News