loader
பாஸ் பேரணிக்கு மருத்துவ உதவி, ஆம்புலன்ஸ் சேவைகளை வழங்க உலு சிலாங்கூர் கெஅடிலான் தயாராக உள்ளது! -டாக்டர் சத்திய பிரகாஷ்

பாஸ் பேரணிக்கு மருத்துவ உதவி, ஆம்புலன்ஸ் சேவைகளை வழங்க உலு சிலாங்கூர் கெஅடிலான் தயாராக உள்ளது! -டாக்டர் சத்திய பிரகாஷ்

உலு சிலாங்கூர், மே 13- வருகிற சனிக்கிழமை நடைபெறவுள்ள பாஸ் கட்சியின் “Himpunan Daulat Tuanku” பேரணியில் பங்கேற்கும் மக்களுக்காக மனிதாபிமான அடிப்படையில் மருத்துவ மற்றும் ஆம்புலன்ஸ் சேவைகளை வழங்க உலு சிலாங்கூர் கெஅடிலான் கட்சியினர் தயாராக இருப்பதாக அக்கிளையின் தலைவர் டாக்டர் சத்திய பிரகாஷ் அறிவித்துள்ளார்.

பேரணியில் கலந்துகொள்ளும் பொதுமக்களின் பாதுகாப்பையும் அவசர மருத்துவ உதவிகளையும் உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

அரசியல் கருத்து வேறுபாடுகள் இருப்பது இயல்பு. ஆனால், அது யாருடைய கருத்துரிமையையும் மறுப்பதற்கான காரணமாக இருக்கக்கூடாது. பொறுப்புடன் மற்றும் பொதுமக்கள் அமைதிக்கு பாதிப்பு இல்லாத வகையில் கருத்துகளை வெளிப்படுத்தும் உரிமை அனைவருக்கும் உண்டு.

மலேசிய அரசியலமைப்பின் கீழ் கருத்துரிமை பாதுகாக்கப்பட்டுள்ளது. இது சீர்திருத்த அரசியலை முன்னிறுத்தும் பிகேஆர் கட்சியின் கொள்கைகளுடனும் ஒத்துப்போகிறது என்று அவர் தெரிவித்தார்.

மே 16ஆம் தேதி நடைபெறவுள்ள “Himpunan Daulat Tuanku” குறித்து கருத்து தெரிவிக்கும்போது அவர் இதனை கூறினார்.

இதற்கு முன்பு, சிலாங்கூர் மாநில அரசு, ஷா ஆலாம் பகுதியில் நடைபெறவுள்ள பாஸ் இளைஞர் அமைப்பின் பேரணியை வரவேற்றதுடன், பேரணி சீராக நடைபெற போலீஸ் உதவியை நாடுவதோடு பங்கேற்பாளர்களுக்கு உணவு மற்றும் பானங்களும் வழங்கப்படும் என தெரிவித்திருந்தது.

மேலும் கருத்து தெரிவித்த சத்தியா பிரகாஷ், அமைதியான முறையில் மக்கள் ஒன்று கூடவும் தங்களது கருத்துகளை வெளிப்படுத்தவும் இடமளிப்பதே முதிர்ந்த ஜனநாயகத்தின் அடையாளம் என்றார்.

அரச மரபை மதிப்பது என்பது வெறும் அரசியல் முழக்கமாக இருக்கக்கூடாது. பரஸ்பர மரியாதை, சமூக நல்லிணக்கம் மற்றும் அமைதியை பாதுகாப்பதன் மூலமே அது உண்மையில் வெளிப்பட வேண்டும்.

கருத்துரிமை மட்டுமல்லாமல், ஒழுங்கையும் அமைதியையும் பேணும் பொறுப்புணர்வும் முதிர்ந்த ஜனநாயகத்தின் முக்கிய அம்சமாகும். தூண்டுதல்களைத் தவிர்த்து, மக்கள் மத்தியில் பதற்றம் ஏற்படாத சூழலை அனைவரும் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.

0 Comments

leave a reply

Recent News