கோலாலம்பூர், ஏப் 29 —
இளம் தலைமுறையை குற்றச் செயல்களிலிருந்து பாதுகாக்கும் முயற்சியில், பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மஇகா பிரிகேட் பிரிவினர் கோலாலம்பூர் போலீஸ் படையுடன் இணைந்து குற்றச்செயல் தடுப்பு கருத்தரஙகை ஏற்பாடு செய்தது.
கோலாலம்பூரிலுள்ள 15 தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த 500 மாணவர்கள் இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.
மாணவர்கள் குற்றச்செயல்களை துணிச்சலுடன் நிராகரிக்கும் மனப்பாங்கையும், தங்களைத் தாங்களே பாதுகாத்துக்கொள்ளும் திறனையும் வளர்க்கும் நோக்கில் இந்த விழிப்புணர்வு கருத்தரங்கு வடிவமைக்கப்பட்டது.
சமூகத்தில் அதிகரித்து வரும் பல்வேறு சவால்களுக்கு எதிராக விழிப்புணர்வுடன் செயல்படும் தலைமுறையை உருவாக்குவது முக்கிய இலக்காகக் இது அமைந்தது.
இந்நிகழ்வின் நிறைவு விழாவில் மஇகா தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு உற்சாகம் அளித்தார்.
காவல் துறை மற்றும் கல்வித் துறையுடன் இணைந்து மேற்கொள்ளப்படும் இத்தகைய முயற்சிகள் மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்கும் முக்கியமான அம்சமாக அமையும் என அவர் வலியுறுத்தினார்.
புலாபோல், ஜாலான் செமாராக் பகுதியில் உள்ள டேவான் டான்ஸ்ரீ அப்துல் ரஹ்மான் மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் கூட்டரசு பிரதேசத்திலுள்ள தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பரவலாக பங்கேற்றனர்.
மேலும், காவல் துறை அதிகாரிகள் நேரடியாக கலந்து கொண்டு குற்றச்செயல்களின் அபாயங்கள் மற்றும் தடுப்பு முறைகள் குறித்து விளக்கமளித்தனர்.
கல்வி அமைச்சு மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளின் ஒத்துழைப்புடன் நடைபெற்ற இந்நிகழ்வு, பள்ளி மாணவர்களிடம் சமூகப் பொறுப்புணர்வை வலுப்படுத்தும் ஒரு முக்கிய முயற்சியாக அமைந்தது என கூறலாம்.
0 Comments