மலேசியாவில் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களின் இலக்கவியல் திறனை மேம்படுத்தும் திட்டங்கள் மேலும் அதிகரிக்கப்படும் என இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்துள்ளார்.
தேசிய அளவில் தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான இலக்கவியல் தலைமைத்துவம் மற்றும் மடானி கல்வி உருமாற்றுக் கருத்தரங்கம் 2026 மூன்று நாட்கள் நடைபெற்றது.
மலாக்காவில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு (AI) இலக்கவியல் சிறப்பு கருத்தரங்கை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்து உரையாற்றினார்.
தமிழ்ப்பள்ளிகள் தமிழாசிரியர் கழகம், இலக்கவியல் அமைச்சு மற்றும் கல்வியமைச்சு இணைந்து இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தன.
2030க்குள் மலேசியாவை செயற்கை நுண்ணறிவு முன்னேற்ற நாடாக மாற்றும் இலக்குடன் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.
இலக்கவியல் தொழில்நுட்பம் கடந்த ஆண்டு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சுமார் 25.5% பங்களிப்பு செய்துள்ளதாகவும், 2030க்குள் அதை 30% ஆக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
மேலும், கல்வித் துறையில் இலக்கவியல் தொழில்நுட்பம் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்ட நிலையில், மாணவர்களின் திறன் மேம்பாட்டில் பள்ளிகளும் தலைமை ஆசிரியர்களும் முக்கிய பங்கு வகிக்கின்றனர் என அவர் வலியுறுத்தினார். இதன் அடிப்படையில், செயற்கை நுண்ணறிவு மற்றும் இலக்கவியல் துறையில் பள்ளிகளின் திறனை வளர்க்க அமைச்சு தொடர்ந்து ஆதரவு வழங்கும் என்றும் உறுதியளித்தார்.
அத்துடன், மாநில அளவிலும் இலக்கவியல் தலைமைத்துவ பயிற்சிகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், தற்போது கிள்ளான் பள்ளத்தாக்கில் மட்டுமே நடைபெறும் நிகழ்ச்சிகள் இனி அனைத்து மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த கருத்தரங்கில் 470 தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கலந்து கொண்டனர். மலேசிய இலக்கவியல் கூட்டுறவு நிறுவனத் தலைவர் மற்றும் Asia School of Business நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு பேராசிரியர் டாக்டர் டாவிட் ஆசிர்வாதமும் சிறப்பு சொற்பொழிவு வழங்கினார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற தலைமையாசிரியர்கள், இந்த இலக்கவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொடர்பான பயிற்சிகள் தங்களது திறனை மேம்படுத்த உதவியாக இருந்ததாகவும், எதிர்காலத்தில் மேலும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் தேவைப்படுகின்றன என்றும் தெரிவித்தனர்.
0 Comments