புத்ராஜெயா, ஏப்.22-
டுரியான் துங்கால் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான விசாரணையின் தற்போதைய நிலையை குறித்து சட்டத்துறை தலைவர் (AG) வெளிப்படையான விளக்கம் அளிக்க வேண்டும் என்று ஜாசேகாவின் தேசிய தலைவரும் டாமன்சாரா நாடாளுமன்ற உறுப்பினரும் மற்றும் டிஜிட்டல் அமைச்சருமான கோபின் சிங் டியோ வலியுறுத்தியுள்ளார்.
இந்த சம்பவம் நடந்து சுமார் ஐந்து மாதங்கள் கடந்துள்ள நிலையில், சம்பவத்தில் தொடர்புடையவர்களுக்கு எதிராக தெளிவான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலை தெரிகிறது.
இந்த வழக்கின் முக்கியத்துவத்தை அறிய வேண்டும். இந்த வழக்கு தொடர்பாக பல்வேறு கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவற்றை ஆதரிக்கும் வகையில் ஒலிப்பதிவுகள் உள்ளிட்ட ஆதாரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.
எனவே, இந்த வழக்கின் விசாரணை நிலை குறித்து விளக்கம் கோருவது முற்றிலும் நியாயமானது.
இது பொதுமக்கள் சார்ந்த ஒரு முக்கிய விவகாரம். உண்மையில் என்ன நடந்தது என்பதை அறிய பொதுமக்களுக்கு உரிமை உள்ளது. மேலும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரும் தங்களுக்கு நீதி மற்றும் நியாயமான பதில்கள் கிடைக்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
எனவே இந்த வழக்கின் விசாரணை எந்த நிலையில் உள்ளது என்பதை சட்டத்துறை தலைவர் விளக்கம் கொடுக்க வேண்டும் என்றும், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக எப்போது நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று கோபின் சிங் அறிக்கை விடுத்துள்ளார்.
0 Comments