கோலாலம்பூர், ஏப்.19-
சட்டத்திற்கு புறம்பாக அந்நியர்களால் நடத்தப்படும் உலோக மறுசுழற்சி மையங்கள் தொடர்பாக கடுமையான கேள்விகள் எழுந்துள்ளன. இத்தகைய மையங்கள் பல இடங்களில் இயங்கிக் கொண்டிருப்பது தெரிந்திருந்தும், அமலாக்க அதிகாரிகள் அதனை கண்டும் காணாதது போல் இருப்பதாக குற்றச்சாட்டை மிம்தா எனப்படும் மலேசிய இந்திய உலோக மறுசுழற்சி மைய உரிமையாளர் சங்கம் முன்வைத்துள்ளது.
இந்த நிலையைக் குறித்து மிம்தா தீவிர கவலை வெளியிட்டுள்ளது. சட்டவிரோதமாக செயல்படும் இம்மையங்கள் திருட்டு பொருட்கள் விற்பனைக்கு வழிவகுக்கின்றன என்றும், இதனால் குற்றச்செயல்கள் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் சங்கத்தின் செயலாளர் முத்தப்பன் தெரிவித்தார்.
திருட்டு பொருட்களை வாங்குபவர்கள் மீது இதுவரை எந்தவிதமான கடுமையான நடவடிக்கையும் எடுக்கப்படாதது ஏன்?” என்ற கேள்வியை மிம்தா முன்வைத்துள்ளது.
சட்டத்தை மீறும் இத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிராக உடனடி மற்றும் கடுமையான அமலாக்கம் தேவைப்படுகின்றது என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
முறையான வியாபார உரிமைத்தை வைத்திருக்கும் எங்களின் மையங்களில் வாரத்திற்கு ஒரு முறை அமலாக்கப் பிரிவினர் சோதனையை மேற்கொள்கிறார்கள். இதனால் சுமார் 2 மணி நேரத்திற்கு எங்களின் வியாபாரம் பாதிப்படைகிறது என்றும் முத்தப்பன் கூறினார்.
ஆனால் சட்டத்திற்கு புரம்பாக மூன்று சக்கர மோட்டாரில் உலோக பொருட்களை சேகரிக்கும் அந்நியர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து, அவர்கள் தற்போது லோரிகளை கொண்டு இந்த வியாபாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். அதிலும் சிலர் சொந்தமாக உலோக மறுசுழற்சி மையங்களை வழிநடத்தியும் வருகின்றனர்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றும், சட்டவிரோத செயல்களை முழுமையாக கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் மிம்தா கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரிகள் எப்போது நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள் என்பது எதிர்பார்ப்பாக உள்ளது. உடனடி நடவடிக்கையை அவர்கள் முன்னெடுப்பார்கள் என்று நாம் நம்புவோம் என்றார்.
0 Comments