பெட்டாலிங் ஜெயா, மார்ச் 25-
தாமான் கனகாபுரம் கம்போங் முனியாண்டியில் அமைந்துள்ள ஸ்ரீ மகா முனீஸ்வரர் அம்மன் ஆலயம், இளைஞர்களின் ஒருங்கிணைந்த முயற்சியால் புதிய உயிர் பெற்றுள்ளது.
சுமார் 70 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயம், நீண்டகாலமாக நடைபெற்று வந்த திருப்பணிகளுக்குப் பிறகு, தற்போது முழுமையாக புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேக விழாவை விமரிசையாகக் கொண்டாடியது.
இந்த விழா, வெறும் சமய நிகழ்வாக மட்டுமல்லாமல், இளைஞர்களின் ஒற்றுமை மற்றும் சமூகப் பொறுப்புணர்வை வெளிப்படுத்தும் முக்கிய தருணமாக அமைந்தது.
ஆலயத் தலைவர் மணிமாறன் முருகேசு கூறுகையில், இவ்விழாவின் வெற்றிக்கு இளைஞர்களின் அயராத முயற்சியே காரணம் எனக் குறிப்பிட்டார். “நீண்ட காலமாக நிலுவையில் இருந்த ஆலயப் பணிகளை, இளைஞர்கள் ஒன்று சேர்ந்து முடித்து வைத்துள்ளனர்.
அவர்களின் ஒத்துழைப்பே இன்றைய வெற்றியின் அடிப்படை,” என்றார்.
தலைமை குருக்கள் சிவாகம ரத்ன சிவஸ்ரீ பி. யாகேசன் குருக்கள் மற்றும் ஆலய தலைமை குருக்கள் சிவாச்சாரியார் சிவஸ்ரீ கனகலிங்க ருத்ரா குருக்கள் தலைமையில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தில், சுற்றுவட்டார மக்களுடன் சேர்ந்து பெருமளவிலான இளைஞர்கள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
இவ்வாலயம் சமய வழிபாடுகளுக்கு அப்பாற்பட்டு, சமூக சேவைகளிலும் கவனம் செலுத்தி வருவது அதன் சிறப்பாகும். இதனை பாராட்டிய ஆலய ஆலோசகர் மற்றும் பத்துமலை ஐயப்ப சுவாமி தேவஸ்தானத் தலைவர் யுவராஜா குருசாமி, இளைஞர்கள் முன்னிலையில் ஆலயம் வளர்ச்சி அடைவது சமூகத்திற்கு ஒரு நல்ல முன்னுதாரணம் என்று தெரிவித்தார்.
இந்த கும்பாபிஷேகம், ஒரு ஆலய விழாவைத் தாண்டி, சமூக ஒற்றுமையையும் இளைஞர் சக்தியையும் எடுத்துக்காட்டும் நிகழ்வாக அமைந்துள்ளது.
0 Comments