loader
நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் சம்பவங்கள்: பார்வையற்ற எங்களிடம் உள்ள ஒற்றுமை உங்களிடம் ஏன் இல்லை? -மகேந்திரன்

நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் சம்பவங்கள்: பார்வையற்ற எங்களிடம் உள்ள ஒற்றுமை உங்களிடம் ஏன் இல்லை? -மகேந்திரன்


கோலாலம்பூர், மார்ச் 10-
பார்வையற்றோராகிய தங்களுக்கு தொலைநோக்குப் பார்வை இருக்கும்போது, ஒளிபடைத்த இரு விழிகள் கொண்டவர்களுக்கு அது இல்லாமல் போனது வருத்தமாக இருக்கிறது என்று மலேசிய பார்வையற்றோர் சங்கத்தின் முன்னாள் மாணவரும் இந்நாள் ஆதரவாளருமான மகேந்திரன் வருத்தம் தெரிவித்தார்.

நேற்று 'விஸ்மா எம்ஏபி'-இல், பல இன மக்களுடன் ஒற்றுமையை நோன்பு துறப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தபின், செய்தியாளர்களிடம் பேசிய பொழுது நாங்கள் ஒற்றுமையாக இருக்கும்போது ஏன் உங்களால் முடியாது என்று தற்பொழுது சமய சமூக சலசலப்பில் சிக்கித் தவிப்போரை நோக்கி 'தர்மம் தலைகாக்கும்' சமூக நல இயக்கத்தின் 
தலைவருமான மகேந்திரன் கேள்வியை எழுப்பினார்.

இப்போது நாட்டில் அமைதியை சீர்குலைக்கும் வகையில் பல சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.

இது எங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது; நாம் அனைவரும் மலேசியர்கள்.  இத்துணைக் காலமும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தோம். ஆனால் இன்று நமக்குள் ஏகப்பட்ட பிரச்சனைகள்.

இதைக் கேட்கும் போது மனது வலிக்கிறது. கண் பார்வை இழந்த நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம்.

எங்களிடையே எந்த ஒரு பிரிவினை வாதமும் இல்லை. ஒருவருக்கு ஒருவர் அன்பாக இருக்கிறோம். அவரவர் மதத்தை மதிக்கிறோம். 

ஆனால் இன்று நாட்டில் அமைதியை சீர்குலைக்கும் வகையில் நடக்கும் சம்பவங்களைப் பார்த்தால் பெரும் வேதனையாக இருக்கிறது. 

தர்மம் தலைகாக்கும் சமூக நல இயக்கத்தின் ஏற்பாட்டில் நேற்று கண் பார்வையற்றோர் சங்கத்தின் மண்டபத்தில் நோன்பு திறப்பு நிகழ்ச்சி  எளிமையாகவும் அதேவேளை பொருள் பொதிந்ததாகவும் நடைபெற்றது.

மகேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் 100க்கும் மேற்பட்ட பார்வையற்றோர் கலந்து கொண்டனர். 

மலாயர், சீனர்,  தமிழர் என பல இனங்களைச் சேர்ந்த  பார்வையற்றோர் ஒற்றுமையாக இந்த நிகழ்வில் கலந்து கொண்டு தங்களின் அன்பை பரிமாறிக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் கலைத்துறையைச் சேர்ந்த தண்டபாணியும் கலந்து கொண்டு இந்த ஒற்றுமையை நோன்பு துறப்பு நிகழ்ச்சிக்கு மேலும் சிறப்பு சேர்த்தார்.

0 Comments

leave a reply

Recent News