கோலாலம்பூர், மார்ச் 3-
மத்திய கிழக்கில் சிக்கியுள்ள மலேசியர்களை பாதுகாப்புடன் மீட்க வெளிவிவகார அமைச்சகம் உடனடி மற்றும் தீர்மானமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் முற்போக்கு கட்சியின் (பிபிபி) தேசிய இளைஞர் தலைவர் சத்தியா சுதாகரன் வலியுறுத்தியுள்ளார்.
போர் நிகழும் பகுதியில் தங்கியுள்ள மலேசிய மாணவர்கள், தொழிலாளர்கள், யாத்திரிகர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் உள்ளிட்டோரின் பாதுகாப்பு, நலன் மற்றும் வாழ்வாதாரத்தைப் பற்றிய கவலைகளை எழுந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
சர்வதேச அவசரநிலைகளில், வெளிநாடுகளில் உள்ள தனது குடிமக்களை பாதுகாப்பது அரசின் முதன்மை பொறுப்பாக இருக்க வேண்டும் என்றும் அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.
சர்வதேச அமைப்புகள் மற்றும் அண்டை நாடுகளுடன் ஒருங்கிணைந்து அவசர வெளியேற்ற மற்றும் மீட்கும் நடவடிக்கைகளை உடனடியாக செயல்படுத்த வேண்டும்.
மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவுவதற்காக தனிப்பட்ட செயற்பாட்டு குழுவையும், 24 மணி நேர உதவி அழைப்புக்கான ஹாட்லைனையும் அமைக்க வேண்டும் என்றும், அப்பகுதியில் உள்ள மலேசிய தூதரகங்கள் மற்றும் துணை தூதரகங்கள் வழியாக தொடர்ச்சியான மற்றும் தெளிவான தகவல் பரிமாற்றம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
அரசின் தெளிவான தகவல் மற்றும் அவசர நடவடிக்கை, அவர்களுக்கு நம்பிக்கையும் உறுதியும் அளிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
மலேசியர்களின் பாதுகாப்பும் நலனும் அரசியல் எல்லைகளை மீறிய ஒன்றாக இருக்க வேண்டும் என்றும், மனிதாபிமான ஒருங்கிணைப்பு முயற்சிகளில் பிபிபி இளைஞர் பிரிவு முழுமையான ஆதரவை வழங்கத் தயாராக இருப்பதாகவும் சத்தியா சுதாகரன் தெரிவித்தார்.
0 Comments