கோலாலம்பூர்,ஜன.14-
மலேசியா முழுவதும் தமிழ்ப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்ந்து குறைந்து வருவது குறித்து மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரான டத்தோஸ்ரீ எம். சரவணன் கவலை தெரிவித்துள்ளார்.
தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கினாலும், சேர்க்கை எண்ணிக்கை குறைந்து வருவது கவலைக்குரிய விஷயமாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
2026 கல்வியாண்டிற்கான அண்மைய தரவுகளின்படி, நாடு முழுவதும் உள்ள தமிழ்ப்பள்ளிகளில் முதலாம் வகுப்பில் 10,330 மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர். இது கடந்த ஆண்டு 11,021 மாணவர்கள் சேர்ந்திருந்த நிலையை ஒப்பிடுகையில் 691 மாணவர்கள் குறைவாகும்.
தமிழ்ப்பள்ளிகள் மலேசிய இந்திய சமூகத்தின் அடையாளத்திற்கும் முன்னேற்றத்திற்கும் அடித்தளமாக உள்ளன. இப்பள்ளிகளை பாதுகாக்கவும், மேம்படுத்தவும் மஇகா உறுதியாக உள்ளது.
ஆனால் இதை தனித்து செய்வது சாத்தியமில்லை என்று டத்தோஸ்ரீ எம். சரவணன் தெரிவித்தார்.
இந்தச் சூழலை மாற்றுவதற்கு தமிழ் சார்ந்த அரசு சாரா அமைப்புகள், பெற்றோர்–ஆசிரியர் சங்கங்கள், முன்னாள் மாணவர் சங்கங்கள், பள்ளி மேலாண்மை வாரியங்கள் மற்றும் சமூகத் தலைவர்கள் கூடுதல் செயலில் ஈடுபட வேண்டிய அவசியம் உள்ளதாக அவர் வலியுறுத்தினார்.
மேலும், மாணவர் சேர்க்கையில் பெற்றோரின் முடிவுகள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதையும் டத்தோஸ்ரீ சரவணன் சுட்டிக்காட்டினார்.
தமிழ்க் கல்வியின் நீண்டகால மதிப்பை பெற்றோர் உணர வேண்டும். தங்கள் பிள்ளைகளை தமிழ்ப் பள்ளிகளில் சேர்த்து, பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கையை ஆதரிக்க வேண்டும் எனவும் அவர் பெற்றோர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
2026ஆம் ஆண்டின் நிலவரப்படி, மலேசியாவில் 528 தமிழ்த் தொடக்கப் பள்ளிகள் உள்ளன. இதில் சுமார் 155 பள்ளிகள் 30 அல்லது அதற்கு குறைவான மாணவர்களுடன் இயங்கி வருவது கவலைக்குரியதாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.
இது வெறும் எண்ணிக்கைகள் பற்றிய விஷயம் அல்ல. நமது மொழி, பண்பாடு மற்றும் சமூக வலிமையை பாதுகாப்பதற்கான போராட்டமாகும்.
தமிழ்ப் பள்ளிகளின் எதிர்காலம், நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என அவர் மேலும் வலியுறுத்தினார்.
0 Comments