ஷா ஆலம், ஜனவரி 6 –
தமிழ் கடவுள் திருமுருகப் பெருமானுக்கு அர்ப்பணிக்கப்படும் தைப்பூசத் திருநாளன்று, சுற்றுவட்டார பகுதிகளில் பொதுமக்களிடையே மதுபான பயன்பாட்டைத் தடுப்பது உறுதி செய்யப்படும் என சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராயுடு தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது என்று, சிலாங்கூர் மாநில பிபிபி கட்சியின் தலைவர் டாக்டர் சுரேந்திரன் கூறினார்.
தைப்பூசத்தை முன்னிட்டு, சில தினங்களுக்கு பத்துமலை வட்டாரத்தில் மதுபான விற்பனைக்கு அனுமதி வழங்கப்படாது. குறிப்பாக, பத்துமலை சுற்றுவட்டார பகுதிகளில் மதுபான விற்பனை முற்றிலும் தடை செய்யப்படும்.
மேலும், செலாயாங் நகராண்மைக் கழக அதிகாரிகள் மதுபான விற்பனைக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுப்பார்கள் என பாப்பா ராயுடு தெரிவித்துள்ளார்.
மலேசிய திருநாட்டில் தைப்பூசத் தினத்தன்று பத்துமலை, பினாங்கு, ஈப்போ, கெர்லிங், சுங்கை பட்டாணி உள்ளிட்ட முருகப் பெருமான் திருத்தலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுகின்றனர்.
ஆகவே, பத்துமலை தைப்பூசத் திருவிழாவுக்கு மட்டுமல்லாது, நாடு தழுவிய அளவில் நடைபெறும் தைப்பூச விழாக்களின் போது ஆலய வளாகங்களிலும், அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மதுபானம் விற்பனை செய்வதையும், அருந்துவதையும் பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்பதில் சிலாங்கூர் மாநில பிபிபி கட்சி உறுதியாக உள்ளது.
தைப்பூசத் திருவிழா காலத்தில் மதுபான விற்பனைக்கு எதிராக எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும், சிலாங்கூர் மாநில பிபிபி கட்சியின் தலைவர் என்ற முறையில் முழுமையான ஆதரவை வழங்குவதாக டாக்டர் சுரேந்திரன் தெரிவித்தார்.
0 Comments