loader
பத்துமலை மின் படிக்கட்டு விவகாரத்தில் தவறான தகவல்களை பரப்பாதீர்: தனிநபர் பெயரில் விண்ணப்பம் செய்தால் சிக்கல் என்று தேவஸ்தானத்திற்கு தெரியாதா? – பாப்பா ராயுடுவை எச்சரித்தார் டத்தோ சிவக்குமார்

பத்துமலை மின் படிக்கட்டு விவகாரத்தில் தவறான தகவல்களை பரப்பாதீர்: தனிநபர் பெயரில் விண்ணப்பம் செய்தால் சிக்கல் என்று தேவஸ்தானத்திற்கு தெரியாதா? – பாப்பா ராயுடுவை எச்சரித்தார் டத்தோ சிவக்குமார்

கோலாலம்பூர்,ஜன.5-
பத்துமலை மின் படிக்கட்டு திட்டம் தொடர்பாக பாப்பா ராயுடு உண்மை நிலை அறியாமல் கருத்து தெரிவித்து வருவதாக கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான அறங்காவலர் டத்தோ ந. சிவக்குமார் குற்றம்சாட்டினார்.

பத்துமலை மேல்குகைக்கு செல்ல மின் படிக்கட்டு அமைக்கும் திட்டத்தை கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானம் முன்னெடுத்து வருகிறது. இதற்கான அனுமதி பெற கோம்பாக் நில அலுவலகத்தில் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டது.

தொடக்கத்தில் தேவஸ்தானத்தின் பெயரிலேயே விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால், கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானம் நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருவதாலும், அதற்கு ஆர்ஓஎஸ் பதிவு எண் இல்லாததாலும் அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக அவர் விளக்கினார்.

இதனைத் தொடர்ந்து, நில அலுவலகத்தின் ஆலோசனைப்படி ஆலயத் தலைவர் பெயரில் விண்ணப்பம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டது. தனிநபர் பெயரில் விண்ணப்பித்தால் எதிர்காலத்தில் சிக்கல்கள் ஏற்படக்கூடும் என்பதை கருத்தில் கொண்டு, ஆலயத் தலைவருக்கு அதிகாரம் வழங்கி, தேவஸ்தான அறங்காவலர்கள் அனைவரும் கையெழுத்திட்டு, அதற்கான நீதிமன்ற ஒப்புதலையும் பெற்ற பின்னரே புதிய விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டதாக டத்தோ சிவக்குமார் தெரிவித்தார்.

இந்த நிலையில், தேவஸ்தானம் எந்த தவறும் செய்யவில்லை என அவர் வலியுறுத்தினார். பிரச்சினைக்கு தீர்வு காண முடியாத காரணத்தினாலேயே நீதிமன்றத்தை நாட வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் கூறினார்.

தற்போது இந்த விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் என்ற முக்கிய பொறுப்பில் இருக்கும் பாப்பா ராயுடு, உண்மை நிலையை அறியாமல் பேசுவது வருத்தமளிப்பதாக டத்தோ சிவக்குமார் சுட்டிக்காட்டினார். சந்தேகம் இருந்தால் நேரடியாக எங்களிடம் கேட்கலாம் என்றும், தனிநபர் பெயரில் விண்ணப்பம் செய்ததாக கூறி விவகாரத்தை திசைதிருப்ப வேண்டாம் என்றும் அவர் தெரிவித்தார்.

முடிந்தால் உதவி செய்யுங்கள்; இல்லையெனில் அமைதியாக இருங்கள். தவறான தகவல்களை பரப்பி மக்களிடையே குழப்பம் ஏற்படுத்த வேண்டாம் என டத்தோ ந. சிவக்குமார் கடுமையாக வலியுறுத்தினார்.

0 Comments

leave a reply

Recent News