ஷா ஆலம், ஜன 2-
மலேசிய திராவிடர் இயக்கத்தின் ஏற்பாட்டில்,
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின்
52ஆவது நினைவு நாள் நிகழ்ச்சி அண்மையில் வெகுசிறப்பாக நடைபெற்றது.
மனிதர்கள் பகுத்தறிவுடன் சுயமரியாதையோடு வாழ வேண்டும் என்ற வழிக்காட்டலை உலகிற்கு எடுத்துரைத்தவர் தந்தை பெரியார்.
அவர் நம்மை விட்டு மறைந்திருந்தாலும், அவர் வகுத்துச் சென்ற சுயமரியாதை வழிக்காட்டலும் கொள்கைகளும் இன்றளவும் பின்பற்றப்பட்டு வருகின்றன என்று,
ஷா ஆலம் மாப்பிளை உணவக மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கழகத்தின் தேசிய பொதுச் செயலாளர் பொன். பொன்வாசகம் உரையாற்றினார்.
கழகத்தின் தேசிய இளைஞர் பிரிவுத் தலைவர் பா. சோமசம்பந்தனார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை, நெறியாளர் பொன். வெண்முல்லை சிறப்பாக வழிநடத்தினார்.
தமிழ் வாழ்த்து மற்றும் கொள்கைப் பாடலுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியின் முதல் அங்கமாக, இளைஞர் மாணவர் படைப்புகளாக யு. இன்பகீரன் மற்றும் யு. இயல்வளவன் ஆகியோர் தங்களது படைப்புகளை வழங்கினர்.
இதனைத் தொடர்ந்து, கழகத்தின் பொறுப்பாளர்களின் படைப்புகளாக
கவிதைகள், சிறப்புரைகள், கலந்துரையாடல், ஆத்திச்சூடி, ஓவியப் படைப்புகள் உள்ளிட்ட பல்வேறு அங்கங்கள் இடம்பெற்றன.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் கழகத்தின் தேசியத் தலைவர் சா. இரா. பாரதி அன்பளிப்புகளை வழங்கினார்.
சிறப்பு நிகழ்ச்சியாக, மலேசிய திராவிடர் கழக காற்பந்து குழு அறிமுகம் செய்யப்பட்டு, அதன் விளையாட்டு சீருடையை தேசியத் தலைவர் அறிமுகம் செய்து வைத்தார்.
இரவு விருந்தோம்பலுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுபெற்றது.
0 Comments