loader
மலரும் 2026 புத்தாண்டு மலேசிய இந்திய சமுதாயத்திற்கு வலிமையையும் அரசியல் ஒருமைப் பாட்டையும் அளித்திட வேண்டும்! -டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன்

மலரும் 2026 புத்தாண்டு மலேசிய இந்திய சமுதாயத்திற்கு வலிமையையும் அரசியல் ஒருமைப் பாட்டையும் அளித்திட வேண்டும்! -டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன்

கோலாலம்பூர், டிச.31-
மலரும் 2026 புத்தாண்டு மலேசிய இந்திய சமுதாயத்திற்கு வலிமையையும் அரசியல் ஒருமைப் பாட்டையும் அளித்திட வேண்டும் என்று மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ டாக்டர் ச. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தேசிய அரசியல் களம் அடுத்த பொதுத் தேர்தலை நோக்கி பயணிக்கின்ற தற்போதைய சூழலில், மஇகா-வும் முக்கியமான அரசியல் நகர்வை நோக்கி பயணிக்கிறது என்பதை மலேசிய இந்திய சமுதாயத்திற்கு வெளிப்படையாக தெரிவித்துக் கொள்ளும் அதேவேளை, இந்திய சமுதாயம் வளரும்  இப்புத்தாண்டில் வளமும் நலமும் பெற்று இந்த மலையக நாட்டில் தங்கள் அடித்தளத்தை மேலும் வலுப்படுத்திட எல்லாம் வல்ல இறைவன் துணை புரிய வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாக 2026 புத்தாண்டு வாழ்த்து செய்தியில் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஆட்சி அதிகாரத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மலேசிய இந்தியர்களின் அரசியல்-சமூகம்-பொருளாதாரம்- கல்வி-சமயம் சார்ந்து தொடர்ந்து ஆக்ககரமாக மஇகா தொய்வின்றி செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, கல்வி மறுமலர்ச்சியில் இந்திய சமுதாயம் உன்னத நிலையை அடைய வேண்டும் என்பது மஇகா-வின் நிலைப்பாடாகும்.

அந்த வகையில் துன் சாமிவேலு அவர்களின் சிந்தனைக்கேற்ப ஒவ்வொரு பட்டதாரியை உருவாக்கும் கடப்பாட்டில், மஇகாவின் கல்வி கரமான எம்.ஐ.இ.டி. இன்கீழ் இயங்கும் ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம், டேப் கல்லூரி ஆகிய கல்வி நிறுவனங்களின் மூலம் கல்விச் சேவை வழங்கி வருகிறது மஇகா.

அந்த வகையில் இந்திய சமுதாயம் கல்வியில் சிறந்த அடைவு நிலையை எட்டுவதுடன் பொருளாதார மேம்பாடு, வளப்பம், சமுதாய ஒற்றுமை, ஆன்மீக மறுமலர்ச்சி ஆகியவற்றை மலரும் இந்த 2026-ஆம் வருடத்தில் எட்டிட மஇகா சார்பிலும் குடும்பத்தின் சார்பிலும் வாழ்த்துவதாக டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

0 Comments

leave a reply

Recent News