கோலாலம்பூர், டிச. 29-
கெடா மற்றும் பினாங்கில் திட்டமிடல் குற்றச்செயலில் ஈடுபட்டு வந்த ‘கேங் ராமெஸ்’ என அழைக்கப்படும் கும்பலை Ops Tiga சிறப்பு நடவடிக்கையின் மூலம் போலீசார் முறியடித்துள்ளனர்.
புக்கிட் அமான் குற்றப்புலனாய்வு துறை, கெடா மாநில போலீஸ் குற்றப்புலனாய்வு பிரிவு மற்றும் புக்கிட் அமான் சிறப்பு பிரிவு இணைந்து
நவம்பர் 27 முதல் டிசம்பர் 4 வரை நடத்திய இந்த நடவடிக்கையில் 17 பேர் கைது செய்யப்பட்டனர்.
கொலை, ஆயுதம் பயன்படுத்திய குழுக் கொள்ளை, கடுமையான தாக்குதல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல குற்றங்களில் இந்த குழு ஈடுபட்டதாக போலீசார் செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவித்தனர்.
முன்னதாக ‘கேங் 35' பின்னர் ‘கேங் ரூசா போய்’ என அழைக்கப்பட்ட இந்தக் குழு, தற்போது ‘கேங் ரமேஷ்’ என்ற பெயரில் செயல்பட்டு வந்தது.
சுங்கை பெட்டானி, குலிம் மற்றும் புலாவ் பினாங்கின் சில பகுதிகளில் கொள்ளை, கொடூர தாக்குதல், கொலை மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்ற வன்முறை குற்றங்களில் இந்தக் குழு தீவிரமாக ஈடுபட்டு வந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
சுமார் 35 உறுப்பினர்கள் கொண்ட இந்த குழுவின் தலைவர் ஜி.ஆர். ரமேஷ் உட்பட 15 பேர் தற்போது தலைமறைவாக உள்ளதாக புக்கிட் அமான் குற்றப்புலனாய்வு தடுப்பு பிரிவின் இயக்குநர் டத்தோ எம். குமார் தெரிவித்தார்.
மேலும் கைது செய்யப்பட்ட அனைவருக்கும் முன்பிருந்தே கொலை, ஆயுதம் பயன்படுத்திய குழுக் கொள்ளை, கடுமையான காயம் ஏற்படுத்துதல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்ற குற்றப் பதிவுகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட 17 பேரில், ஏழு பேர் 2020 ஆம் ஆண்டு குற்றச் சட்டத்தின் பிரிவு 130Vன் கீழ் தண்டனை பெற்றவர்கள் என்றும், ஐந்து ஆண்டு சிறைத் தண்டனை அனுபவித்து 2024 ஜனவரியில் விடுதலையான பின்னர், மீண்டும் அதிக ஆக்கிரமிப்புடன் இந்தக் குற்றக்குழுவை அமைத்ததாகவும் டத்தோ குமார் கூறினார்.
கைது செய்யப்பட்ட அனைவரும் SOSMA சட்டத்தின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். வழக்கு ஆவணங்கள் சட்டத்துறைத் தலைவரிடம் ஒப்படைக்கப்பட்டு, சுங்கை பெட்டானி செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட உள்ளது என அவர் தெரிவித்தார்.
0 Comments