கோலாலம்பூர், அக்.14-
மஇகா இளைஞர் பிரிவு, பள்ளி மாணவர்களை உட்படுத்திய சமீபத்திய அதிர்ச்சியளிக்கும் சம்பவங்களால், குறிப்பாக பள்ளியில் பாலியல் வன்கொடுமை, எஸ்பிஎம் மாணவரின் தற்கொலை மற்றும் இன்று நடந்த கொலை சம்பவம் ஆகியவற்றால் பெருத்த கவலையும் ஏமாற்றமும் அடைந்துள்ளதாக மஇகா இளைஞர் பிரிவின் தலைவர் அர்விந்த் கிருஷ்ணன் தெரிவித்தார்.
இந்தச் சம்பவங்கள் அனைத்தும் பள்ளி வளாகத்திலும், பள்ளி நேரத்திலும் நடந்துள்ளது. மேலும் அதிர்ச்சியளிக்கின்றது. தீவிரமான சமூக மற்றும் நன்னெறி நெருக்கடியைப் பிரதிபலிக்கும் இந்த சூழ்நிலையினை உடனடியாகவும் முழுமையாகவும் தீர்க்க வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம்.
பள்ளிகள் மாணவர்கள் கல்வி கற்கவும், எதிர்காலத்தை உருவாக்கவும் மிகவும் பாதுகாப்பான இடமாக இருக்க வேண்டும், மன உளைச்சலையோ அச்சத்தையோ ஏற்படுத்தும் இடமாக இருக்கக்கூடாது என அவர் சொன்னார்.
மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் மனநலத்தினை முன்னுரிமையாக கருத வேண்டுமே தவிர, ஒரு சிறு பிரச்சினையாக அலட்சியப் படுத்தக் கூடாது.
ஆதலால், மஇகா இளைஞர் பிரிவு, மலேசிய கல்வி அமைச்சு மற்றும் அதன் தொடர்புடைய இலாகாக்கள் பின்வரும் உறுதியான நடவடிக்கைகளை செயல்படுத்த வலியுறுத்துகிறது:
அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களைப் பாதுகாக்கும் கொள்கைகளை வலுப்படுத்துதல், முக்கியமாக பகடிவதை, தொந்தரவு மற்றும் அத்துமீறல் தொடர்பாக ரகசிய புகார் அளிக்கும் வழிகளை உருவாக்குதல்,
மாணவர்களுக்கு குறிப்பாக முக்கிய தேர்வுகளுக்கு முன்பு, மனநல பரிசோதனை மற்றும் கட்டாய வழிகாட்டி ஆலோசனைகளை செயல்படுத்துதல்,
மாணவர்களிடையே மன அழுத்தம் அல்லது தீய நடத்தைகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து களைய பள்ளிகள், பெற்றோர்கள் மற்றும் சமூக அமைப்புகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்துதல்,
மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த காவல் துறையுடன் இணைந்து பள்ளி வளாகங்களில் திடீர் ஆய்வு செய்தல் அவசியமாகும்.
ஒவ்வொரு மாணவரின் உயிரிழப்பும் வெறும் புள்ளிவிவரமல்ல. அவர்கள் நாட்டின் எதிர்காலமாக அமைய வேண்டியவர்கள், அவர்களின் இழப்பு குடும்பங்களையும் சமுதாயத்தையும் நிலைகுலையச் செய்துள்ளது. இனிமேலும் வெறும் அறிக்கைகளோ உறுதிமொழிகளோ இல்லாமல், தீவிரமான மற்றும் உறுதியான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டிய நேரம் இது.
மஇகா இளைஞர் பிரிவு, இந்நாட்டில் ஒவ்வொரு மாணவரும் பாதுகாப்பாகவும், பாதுகாக்கப்பட்டவர்களாகவும் உணர வேண்டும் என்பதை உறுதிப்படுத்த அரசாங்கம், அரசு சாரா இயக்கங்கள் மற்றும் கல்வி அமைப்புகளுடன் ஒத்துழைக்கத் தயாராக உள்ளதாகவும் அர்விந்த் கிருஷ்ணன் தெரிவித்தார்.
0 Comments