ஷா ஆலம், செப்.28-
பல ஆண்டு காலமாக சமூக சேவைகளில் ஈடுபட்டு தற்போது என் சமுதாயத்தின் தலையெழுத்தை மாற்ற அரசியலுக்கு வருவதாக சமூக சேவகரும் புரட்சி அமைப்பின் தோற்றுநருமான உமாகாந்தன் தெரிவித்தார்.
இந்நாட்டில் அன்று தொட்டு இன்று வரை இந்திய சமுதாயத்தின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்தபாடில்லை.
சமுதாயத்தின் குரலாக இருப்பேன் என கூறி இன்று ஆட்சியில் அமர்ந்துள்ள பல இந்திய தலைவர்கள் இன்று மௌனம் சாதிக்கின்றனர். நம் சமுதாயத்தின் தேவைகளை பற்றிய கவலையும் அவர்களுக்கில்லை. வாய் பேச்சில் வீரனாக இருந்தவர்கள் இன்று எதையும் சாதிக்கவில்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்று.
அதனால் சமுதாயத்திற்காக எதையும் செய்யாத தலைவர்களை பற்றி பேசுவதை விடுத்து நாங்களே சமுதாயத்திற்கு சேவையாற்றவும் நம் சமுதாயத்தின் தேவைகளை கேட்டு பெறுவதற்கு முன் வந்துவிட்டதாக உமாகாந்தன் தெரிவித்தார்.
கடந்த பல ஆண்டுகளாக ஸ்ரீ மூடாவில் வெள்ளப் பிரச்சினை நிலவி வருகிறது. இதனால் அவரை அதற்கு தீர்வு கிடைத்ததில்லை. ஒரு பிரச்சினைக்கு மக்கள் கூடி குரல் கொடுத்தால் மட்டுமே தற்காலிக தீர்வு கிடைக்கிறது. மக்களின் பிரதிநிதிகளாக இருக்கும் தலைவர்கள் களத்தில் இறங்கி தீர்வு கிடைக்க போராடியதும் இல்லை. அதை பற்றி கவலையும் அவர்களுக்கு இல்லை. அதனால் இளைஞர்கள் நாங்கள் தற்போது மலேசிய இந்திய மக்கள் கட்சியில் (எம்ஐபிபி) இணைந்து அரசியல் களத்தில் கால் பதித்து எங்களின் பிரச்சினைகளை நாங்களே சரி செய்ய தயாராகிவிட்டோம் என அவர் சொன்னார்.
இதற்கிடையில் இன்று எம்ஐபிபி கட்சியின் கோத்தா ராஜா தொகுதியின் தொடக்க விழா நடந்தது. இந்த தொகுதியின் கீழ் 3 சட்டமன்றங்கள் அதாவது கோத்தா கெமுனிங், செந்தோசா, சுங்கை கண்டீஸ் ஆகியவை உருவாக்கப்பட்டன.
எம்ஐபிபி கட்சியின் தேசியத் தலைவர் புனிதன் தலைமையில் இந்த தொடக்க விழா நடைப்பெற்றதுடன் கோத்தா ராஜா தலைவராக உமாகாந்தன் அறிவிக்கப்பட்டார்.
தொடக்க விழாவில் இந்த தொகுதியிலுள்ள வெள்ளப் பிரச்சினை, வெளிநாட்டவர்களின் ஆதிக்கம், அடுத்த பொதுத் தேர்தலில் சிலாங்கூர் மாநிலத்தை பெரிக்காத்தான் நேஷனல் கைப்பற்றுவதற்கான நடவடிக்கைகள் என 7 கோரிக்கைகளை உமாகாந்தன் முன்வைத்ததுடன் இத்தொகுதியின் கிழ் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் 10,000 உறுப்பினர்களை கட்சியில் சேர்ப்பதாகவும் அவர் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
0 Comments