கோலாலம்பூர், செப்.9-
மலேசிய மக்கள் சக்தி கட்சியில் கடந்த 16 ஆண்டுகள் உழைத்து ஓடாய் தேய்ந்து போனதுதான் மிட்சம் என கூறிய அக்கட்சியின் உதவித் தலைவரான மணிவண்ணன், இன்றுடன் அதிகாரப்பூர்வமாக அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
கட்சி தலைமைத்துவம் முறையான காரணமின்றி என்னை கட்சியிலிருந்து 3 ஆண்டுகள் இடை நீக்கம் செய்துள்ளது. என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கூறவும் வாய்ப்பு வழங்கவில்லை.
என் மீது குற்றம் சாட்டப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கான விளக்கத்தை வழங்க காரணம் கோரும் கடிதத்தையும் கட்சி கேட்கவில்லை. மேலும் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழுவினரும் என்னிடம் பேசவில்லை என பேரா மாநில மலேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவருமான அவர் கூறினார்.
எனக்கு துரோகம் செய்யப்பட்டுள்ளது. ஆகையால் என்னோடு இணைந்து என் தொகுதியான லுமூட் கிளை உறுப்பினர்களான 1,500 பேர் கட்சியை விட்டு விலகுவதாக முடிவு எடுத்துள்ளனர் என இன்று செந்தூல் மெட்ராஸ் காபே உணவகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்புக் கூட்டத்தில் மணிவண்ணன் கூறினார்.
என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கான விளக்கம் மற்றும் மலேசிய மக்கள் சக்தி கட்சியில் எனது சேவைகள் அடங்கிய முழு விவரங்களை புத்தகம் வடிவில் தயாரித்து கட்சி தலைமையிடம் நான் வழங்கியுள்ளேன். ஆனால் இதுவரை அதன் தொடர்பில் எந்த பதிலும் கிடைக்கவில்லை.
மேலும் என்னை இடைநீக்கம் செய்தது தொடர்பில் தேசிய முன்னணியின் பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ சம்ரியின் சிறப்பு அதிகாரியிடமும் புகார் கூறினேன், ஆனால் அவர்களும் அதனை கண்டுக் கொள்ளவில்லை என அவர் வருத்தத்துடன் கூறினார்.
ஆகையால் மலேசிய மக்கள் சக்தி கட்சியிலிருந்து தான் அதிகாரப்பூர்வமாக விலகுவதாக அவர் அறிவித்ததுடன் தனது அரசியல் பயணம் இத்துடன் முடிந்து விடாது, அது தொடரும் என்றார்.
0 Comments