loader
சுக்மா போட்டியில்  சிலம்பத்தை  புறக்கணிப்பது கவலையை ஏற்படுத்துகிறது மேடையில் சொன்ன வாக்குறுதி என்னவானது ?  – டத்தோ என். சிவகுமார் கேள்வி

சுக்மா போட்டியில் சிலம்பத்தை புறக்கணிப்பது கவலையை ஏற்படுத்துகிறது மேடையில் சொன்ன வாக்குறுதி என்னவானது ? – டத்தோ என். சிவகுமார் கேள்வி

கோலாலம்பூர் -ஆகஸ்ட் 6

சுக்மா எனப்படும் மலேசிய விளையாட்டுப் போட்டி தொடர்பாக இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் ஹன்னா யோவின் அறிவிப்பில் 2026-ஆம் ஆண்டு சிலாங்கூரில் நடைபெறவுள்ள  சுக்மா போட்டியில் கூடுதலாக  நான்கு விளையாட்டுகள் போட்டிகள் அதாவது சதுரங்கம், E- விளையாட்டு, கிரிக்கெட் மற்றும் கபடி இணைக்கப்பட்டுள்ளதாகவும், மொத்தமாக 34 விளையாட்டுகள் இடம்பெற உள்ளதாகவும் அவர் தெரிவித்தார் அந்த முடிவை தாம் வரவேற்பதாக டி.எஸ்.கே இயக்கத்தின் தலைவர்  டத்தோ சிவகுமார் தெரிவித்தார்.

இருப்பினும்  இந்தியர்களின் பாரம்பரியக் கலையான சிலம்பம் இதில் இடம்பெறவில்லை என்பது மிகுந்த வருத்தத்தையும் ஏமாற்றத்தையும் அளிக்கிறது.

2023 ஆம் ஆண்டு ஜூன் 12ஆம் திகதி  சுக்மா  உச்சமன்ற குழு  2026  சுக்மா போட்டியில் சிலம்பத்தைப் பதக்க விளையாட்டாக சேர்க்க தீர்மானிக்கப்பட்டதையும், 2024 ஆகஸ்ட் 20-ஆம் திகதி  சரவாக்கில் நடைபெற்ற சுக்மா போட்டியில்   அமைச்சர் உறுதியளித்ததையும் நாம் மறக்க முடியாது.

அப்போதெல்லாம் உறுதி அளிக்கப்பட்டிருந்த நிலையில் இப்போது அந்த தீர்மானம் என்னாயிற்று?  டத்தோ சிவகுமார் கேள்வி எழுப்பினார்.

மடானி அரசாங்கம் பாரம்பரிய விளையாட்டுகளை பாதுகாக்க முன்னுரிமை அளிக்கும் எனவும், இந்திய இளைஞர்களுக்கு சுக்மா வாயிலாக கபடி, சிலம்பம் போன்ற விளையாட்டுகளில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்பை வழங்குவதாகவும் அமைச்சர் தெரிவித்திருந்தார். ஆனால், இன்று அது பேச்சுகளாகவே முடிந்து விடுவதோடு,  இந்திய இளைஞர்களின் நம்பிக்கையை சிதைக்கும் சூழ்நிலையை அது உருவாக்கியுள்ளது.

"ஒலிம்பிக்கில் இல்லை என்ற காரணம்  முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. சிலம்பம் போன்ற பாரம்பரிய கலைகளில் இளைஞர்கள் ஈடுபாடு காட்டி வருகின்றனர். இவர்களுக்கு இது ஒரு கலை மட்டுமல்ல; வாழ்க்கையின் ஓர் அடையாளமாகவும், வாய்ப்பாகவும் உள்ளது. இதைப் புரிந்து கொண்டு சுக்மாவில் சிலம்பம் தவிர்க்கப்படக்கூடாது என சிவகுமார் தெரிவித்தார்.

இதனை  மறுபரிசீலனை செய்து, எதிர்காலத்தில் இத்தகைய புறக்கணிப்புகள் ஏற்படாதவாறு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். விளையாட்டு என்பது ஓர் பொழுதுபோக்கு மட்டுமல்ல; அது நாடு மற்றும் இளைஞர்களின் எதிர்காலத்தை வடிவமைக்கும் சக்தியாகும். எனவே, சிலம்பம் உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுகளை சுக்மாவில் கட்டாய விளையாட்டாக இணைக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என எதிர்பார்கிறோம் என்றார் சிவகுமார் !

0 Comments

leave a reply

Recent News