புத்ரா ஜெயா, ஜூலை 30 -
இந்தியர்களைத் தொடர்புடைய விசயங்கள் அமைச்சரவையில் கவனிக்கப்படுவதில்லை என சிலர் பரப்பும் தகவல் முற்றிலும் தவறானது என்றும், இது அரசாங்கத்தை பற்றிய தவறான கண்ணோட்டத்தை காட்டுகிறது என ஒற்றுமைத்துறை துணை அமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி தெரிவித்தார்.
கடந்த காலங்களில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் தலைமையிலான அரசாங்கத்தில் தான் AIMST பல்கலைக்கழகம், TAFE கல்லூரி மற்றும் MIED கல்வி உதவித்தொகைக்காக கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இது இந்திய மாணவர்களுக்கு உயர்கல்விக்கான வாய்ப்புகளை உருவாக்குவதற்கு வழி வகுத்தது.
மேலும் மலேசியாவில் பிறந்த இந்தியக் குழந்தைகளுக்கான பிறப்பு பதிவு மற்றும் MyKad வழங்கும் நடைமுறைகளை எளிமைப்படுத்த 2023இல் உள்துறை அமைச்சின் கீழ் சிறப்பு செயற்பாட்டு குழு அமைக்கப்பட்டதையும், இதன் மூலம் ஆவணமின்றி வாழும் இந்தியர்களின் நிலைமையை முடிவுக்கு கொண்டு வர அரசாங்கம் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
TVET மூலம் இந்திய இளைஞர்களுக்கு தொழில்திறன் பயிற்சி அளிக்க, அறிவியல், இன்ஜினியரிங், டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் பசுமை ஆற்றல் போன்ற துறைகளில் படிப்பதற்காக நிதி உதவிகள், வெளிநாட்டு பயிற்சிகள், மற்றும் தொழில் வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக 500 இந்திய இளைஞர்கள் சீனாவிற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
மேலும் (MISI) எனும் புதியத் திட்டம் மனிதவள அமைச்சின் கீழ் வெ.30 மில்லியன் ஒதுக்கீடு கொண்டு செயல்படுத்தப்படுவதையும் அவர் எடுத்துக்காட்டினார்.
மக்கள் நலக் கவுன்சில் தலைமையில், இந்திய மாணவர்களில் கல்வி விட்டுவிடும் பிரச்சனையை தீர்க்கும் வகையில் முழுமையான ஆய்வு மற்றும் நடவடிக்கைத் திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், தேசிய ஒருமைப்பாடு அமைச்சு மற்றும் மலேசிய இந்து சங்கம் இணைந்து நடத்திய தேசிய இந்து கோயில் மாநாட்டின் தீர்மானங்களை அரசு ஏற்றுக்கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதில்,
கோயில் நிலங்கள் சட்டபூர்வமாக பதிவுசெய்யப்படுதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்தியர்களைச் சார்ந்த அனைத்து பிரச்சினைகளுக்கும் சம்பந்தப்பட்ட அமைச்சுகள் மூலம் தொடர்ந்து முடிவுகளை உறுதிப்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அதனால், இந்திய சமூகத்தின் பிரச்சனைகள் அமைச்சரவையில் கருத்தில் கொள்ளப்படுவதில்லை என்ற எந்தவொரு கருத்தும் உண்மைக்கு முற்றிலும் புறம்பானது என துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி தெரிவித்துள்ளார்.
0 Comments