புத்ராஜெயா, ஜூலை 26-
சிறுத்தொழில் வர்த்தகர்களையும் வளர்ந்து வரும் வர்த்தகர்களையும் அங்கீகரிக்கும் வகையில் ரிபுவான் முத்தியாரா செக்கால் ஹோல்டின்ங்ஸ் சென்.பெர்ஹாட் நிறுவனமும் இந்தியாவைச் சேர்ந்த ஒன்றுப்பட்ட இளைஞர் மன்றம் ஆகியவை இணைந்து விருது விழாவை நடத்தியது.
வர்த்தகர்கள் மட்டுமின்றி பிற துறைகளை சார்ந்த வளர்ந்து வரும் தலைவர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த விருது விழாவில் 4 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன.
சமூக வலைத்தளத்தில் முக்கியமான கருத்துகளை முன்வைத்து தலைமைத்துவத்தை கொண்டுள்ளவர்கள் இந்த விருது விழாவில் கௌரவிக்கப்பட்டதாக ரிபுவான் முத்தியாரா செக்கால் ஹோல்டிங்ஸ் சென்.பெர்ஹாட் நிறுவனத்தின் தோற்றுநர் விஷாலினி பழனி தெரிவித்தார்.
மேலும் இந்த விருது விழாவில் இருவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. 1997ஆம் ஆண்டு மே மாதம் 23ஆம் தேதி எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து சாதனைப்படைத்து நாட்டிற்கும் சமுதாயத்திற்கும் பெருமை சேர்த்த டத்தோ மகேந்திரன் மற்றும் டத்தோ மோகனதாஸுக்கு இந்த வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
நம் சமுதாயத்தில் வியாபாரத் துறையில் கால்பதித்து முன்னேறி வரும் வர்த்தகர்களை கௌரவிக்கும் வகையில் இந்த விருது விழாவை முதல் முறையாக எங்களின் நிறுவனத்தின் கீழ் ஏற்பாடு செய்துள்ளோம். தொடர்ந்து சமுதாயத்திற்கு நன்மையளிக்கும் இதுபோன்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்யவுள்ளதாகவும் அவர் சொன்னார்.
இதற்கிடையில் டிசிபி டத்தோ சசிகலா தேவி, தொழிலதிபர் டத்தோ சுரேஷ் ஆகியோருக்கு இந்த விருது விழாவில் விருதுகள் வழங்கப்பட்டன. மொத்தமாக 30 சாதனையாளர்களுக்கு இந்த நிகழ்ச்சியில் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டதாக விஷாலினி பழனி தெரிவித்தார்.
0 Comments