பெஸ்தாரி ஜெயா, ஜூலை 10-
நாளையத் தலைவர்கள் அமைப்பின் ஏற்பாட்டிலான
பாரதி பாவனை கவிதை பயிலரங்கு சுல்தான் சுலாய்மான் ஷா இடைநிலைப்பள்ளி மண்டபத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.
காலை 9.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெற்ற நிகழ்வில் பல இலக்கிய ஆர்வலர்கள், பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு கவிதைப் பயிலரங்கிற்கு பெருமை சேர்த்தனர்.
நிகழ்வின் தலைமை ஏற்பாடுகளை, அமைப்பின் தலைவர் டர்வின் போஸ் சந்திர போஸ் தலைமையில் அமைப்பின் செயலவை உறுப்பினர்கள் எடுத்து நடத்தினர்.
பயிற்றுநராக அழைக்கப்பட்ட 'வளர்பிறை கவிஞர்' சிவா (சுங்கைப்பட்டணி), பாரதியின் பாவனைக்கவிதைகளை ஆழமாக பகுத்து விளக்கி, கவிஞர் பாரதியின் எண்ணங்கள், மொழி வளம், அவரது கவித்திறன் மற்றும் சமூகத்துடன் அவர் வைத்த உறவுகளைப் பற்றிய பயனுள்ள உரையையும், கவிதை பயிற்சியையும் வழங்கினார்.
நிகழ்வில் பங்கேற்றவர்கள் அனைவரும் அவருடைய வழிகாட்டலால் பெரும் இனிமையும், இலக்கிய ஆர்வமும் பெற்றனர். சுமார் 40 க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்நிகழ்வில் கலந்துக் கொண்டு பயன் பெற்றுள்ளது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாக டர்வின் தெரிவித்தார்.
இந்நிகழ்வின் ஒரு முக்கிய தருணமாக, தமிழ் மொழிக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய இடைநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு கௌரவம் செலுத்தும் நிகழ்ச்சியும் இடம்பெற்றது.
அந்த வகையில் ஆசிரியர்களுக்கு பொன்னாடை, சந்தனமாலை மற்றும் நினைவுச்சின்னங்களை வழங்கி, அமைப்பின் தலைவர் டர்வின் போஸ் உரையாற்றியபோது,
நாளைய தலைமுறைகளுக்கு ஊக்கமாக இருந்ததற்கும், தமிழ் மீது விருப்பத்தை விதைத்ததற்கும் இவ்வாசிரியர்கள் செய்த பணி நினைவாகும். அவர்களை கௌரவிப்பது எங்கள் கடமையாகும் எனக் குறிப்பிட்டார்.
நிகழ்வின் முடிவில், இத்திறமையான நிகழ்வை நடைமுறைக்கு கொண்டு வந்த அனைத்து ஆதரவாளர்களுக்கும், பள்ளி நிர்வாகத்திற்கும், சமூக ஊடகங்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கும் அமைப்பு தனது நன்றி பாராட்டுக்களை தெரிவித்தது.
கடந்த ஆறு முறை நிகழ்வை ஏற்பாடு செய்தும் வெற்றிகரமாக நடத்த முடியாமல் பின்னடைவை சந்தித்த அமைப்பு, இந்த முறையில் விடாமுயற்சியின் மூலம் இலட்சியத்தை நனவாக்கியமை அனைவரின் பாராட்டையும் பெற்றது.
இவ்வேளையில் இந்நிகழ்விற்கு நன்கொடை வழங்கி பேருதவி ஆற்றிய இயக்கவியல் அமைச்சர் மாண்புமிகு கோபின் சிங் டியோ அவர்களுக்கும், செந்தில் குமார் டத்தோ முருகையா மற்றும் திரு.எஸ். சுஹன் சுப்பிரமணியம் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொண்டார்.
மேலும் இந்நிகவிற்கு முழு ஆதரவு வழங்கி முழு ஊக்குவிப்பு வழங்கிய
பகாங் மாநில ஆசிரியர் திரு.ஜெயஸ்ரீ செல்வேந்திரன் ஜெயசிங் தனபல்,
அமைப்பின் தோற்றுனர் சந்திர போஸ் மணிவேலு, ஆலோசகர் அங்கமுத்து ராமசாமி, சுல்தான் சுலாய்மான் ஷா இடைநிலைப்பள்ளி
மண்டப நிர்வாகம் மற்றும் சுல்தான் சுலாய்மான் ஷா இடைநிலைப்பள்ளி
தமிழ்மொழி ஆசிரியர் பெருமாள்
ஆகியோருக்கு அமைப்பின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்வதாக தலைவர் டர்வின் தெரிவித்தார்.
-காளிதாசன் இளங்கோவன்
0 Comments