வட அமெரிக்கா, ஜூலை 4-
வட அமெரிக்கத் தமிழ் சங்கங்களின் பேரமைப்பு (FeTNA) 38-வது தமிழ் மாநாட்டின் முதல் நாளான இன்று, Raleigh மாநாட்டு மையத்தில், முதன்மை உரை வழங்கியதில் மகிழ்ச்சி என தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் மஇகாவின் தேசிய துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் தெரிவித்தார்.
FiTEN - FeTNA International Tamil Entrepreneur Summit, உலகத் தமிழர் தொழில்முனைவோர் மாநாட்டின் தொடக்க நிகழ்வுடன் தொடங்கியது. உலகம் முழுவதும் இருந்து திரண்டுள்ள நமது சமுதாயத்தின் திறமைமிக்க தொழில்முனைவோர், பார்வையாளர்கள், நவீன சிந்தனையாளர்கள் ஆகியோர் இந்த மாநாட்டை ஒரு உலகத் தரத்திலான தீர்வுகளை உருவாக்கும் தளமாக மாற்றுவார்கள் என்று எதிர்பார்க்கலாம் என அவர் சொன்னார்.
நாளைய தலைமுறை எதிர்கொள்ளும் மாற்றங்கள், சவால்கள் எதுவாக இருந்தாலும், நமது பாரம்பரியத்தையும், மொழி மற்றும் கலாச்சாரத்தை முன்வைத்து, தொழில் முனைவோர்களின் மூலமாக நவீன உலகிற்கு உகந்த தீர்வுகளை தமிழர் சமூகத்திலிருந்தே உருவாக்க முடியும் என்பதே இந்த மாநாட்டின் முக்கிய நோக்கம் என்றார்.
யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற சங்க இலக்கியத்தின் உயிருள்ள செய்தியை மறுபடியும் உலகிற்கு நினைவூட்டும் விதமாக, இந்த மாநாடு அனைவருக்கும் திறந்தவெளி தளமாக அமைந்துள்ளதாக டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.
0 Comments