செந்தூல்,ஜூன் 25-
ஆண்டுதோறும் மிகச் சிறப்பாக நடைபெற்று வரும் அரசுகவி கவியரசு கண்ணதாசன் நினைவுகளோடு இம்மாதம் 29ஆம் தேதி, ஜாலான் ஈப்போ செந்தூல் செட்டியார்கள் மண்டபத்தில், பிற்பகல் ஒன்றரை மணிக்குத் தொடங்குகிறது.
மங்கல இசையுடன் தொடங்கும் இவ்விழாவில், செயலாளர் கரு.கார்த்திக் அவர்களின் வரவேற்புரை, கவிஞர் கோவதன் அவர்களின் கவிதை, கவிஞர் பெர்னாட்ஷா அவர்களின் 'வள்ளுவன் வழியில் கண்ணதாசன்' எனும் தலைப்பில் உரையும் முதல் அங்கமாக இடம்பெறும்.
தமிழ்நாட்டில் இருந்து சிறப்புச் சொற்பொழிவாளர்கள் தமிழ்ச்சுடர் தாமல் கோ.சரவணன் மற்றும் இசைவாணி திருமதி.இந்திரா விஜயலட்சுமி அவர்கள் 'காலத்தால் அழியாத காவியம்' மற்றும் 'சமூகத்தின் பழுது போக்கிய கவியரசர்' எனும் தலைப்புகளில் முறையே பேசுவார்கள்.
ஆண்டுதோறும் கண்ணதாசன் விழாவில், ஐந்து மலேசிய இந்தியர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்படுவர். மொழி இனம் கலை கலாச்சாரம் என்ற அடிப்படையில் பிரசித்தி பெற்றவர்களுக்கும், மக்களுக்குச் சேவையாற்றியவர்களுக்கும் இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதுவரை 250க்கும் மேற்பட்ட மலேசியர்களுக்கு கண்ணதாசன் விழாவில் விருது வழங்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் இந்த வருடமும் ஐந்து பேர் இந்த விருதைப் பெறவிருக்கிறார்கள்.
மதிப்பிற்குரிய டத்தோ ஸ்ரீ தெய்வீகன், ஓவியர் லேனா, கமல சரஸ்வதி, விஜய வாகினி மற்றும் எல்.ராமன் அவர்களுக்கு இந்த வருடம் விருது வழங்கப்பட விருக்கிறது.
தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும், ம.இ.கா தேசியத் துணைத் தலைவரும், கண்ணதாசன் அரவாரியத்தின் தலைவருமான மாண்புமிகு டத்தோ ஸ்ரீ டாக்டர் எம் சரவணன் அவர்கள் கண்ணதாசன் விழாவிற்குத் தலைமை தாங்கி தலைமை உரையாற்றி தொடக்கி வைப்பார். உலகத் தமிழர்களின் மத்தியில் பிரசித்தி பெற்ற டத்தோ ஸ்ரீ அவர்களின் உரையும் இதில் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
இலக்கிய ஆர்வலர்களும், தமிழன்பர்களும், கண்ணதாசன் பிரியர்களும் தவறாமல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்படி ஏற்பாட்டுக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.
0 Comments