கோலாலம்பூர், ஜூன் 13-
இந்திய திருமண ஏற்பாடுகளை செய்யும் தொழில் துறையில் நம்மவர்கள் ஏதிர்கொள்ளும் சவால்களை களையவும் அணைவரையும் ஒரே குடையின் கீழ் ஒன்றிணைக்கும் முயற்சியில் WPAM அமைப்பு பதிவு செய்யப்படவுள்ளதாக அதன் தலைவர் வேதகுமார் ராஜகோபால் தெரிவித்தார்.
இந்த அமைப்பின் ஏற்பாட்டில் வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதி ஷா ஆலம் திஎஸ்ஆர் மண்டபத்தில் மாபெரும் ஒன்றுக்கூடல் விருந்து உபசரிப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் இந்த தொழில்துறையை சார்ந்த 600க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள் என வேதகுமார் தெரிவித்தார்.
இந்திய திருமண தொழில் துறையை சார்ந்தவர்களின் நலனை காக்க இந்த அமைப்பு முதல் முதலாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் அதிகாரப்பூர்வ பதிவு நடவடிக்கை தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் சொன்னார்.
இந்த துறையை சார்ந்தவர்கள் எதிர்க்கொள்ளும் சவால்கள், பிரச்சினைகள் ஆகியவற்றை கலந்து பேசிய அதனை களைவதே இந்த அமைப்பின் முதல் நோக்கமாகும். மேலும் எங்களின் தேவைகளை அரசாங்கத்திடம் கேட்டு பெருவதற்கும் இந்த அமைப்பு உறுதுணையாக அமையும் என்றும் அவர் சொன்னார்.
திருமண திட்டமிடுபவர்கள், புகைப்படம் மற்றும் காணொளி பதிவு கலைஞர்கள், அலங்கார செய்பவர்கள், உணவு ஏற்பாடு செய்பவர்கள் என பல துறையை சார்ந்தவர்கள் இந்த அமைப்பில் இணைந்துள்ளனர். அனைவரின் நலனை காக்க இந்த அமைப்பு பாடுபடும் என அவர் மேலும் சொன்னார்.
திருமண ஏற்பாட்டுக்கான விலை கட்டுப்பாடு, சுற்றுலா வீசாவில் வந்த இங்கு திருமண தொழில்துறையில் சம்பாதிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பது போன்ற பல தரப்பட்ட விஷயங்களை இந்த அமைப்பு சீர் தூக்கி பார்க்கும். சில ஆலய நிர்வாகங்கள் திருமண ஏற்பாடுகளுக்காக எங்களிடமே பணம் கேட்கின்றனர். இதனால் வாடிக்கையாளர்களிடம் நாங்கள் கூடுதல் கட்டணத்தை வசூலிக்கும் நிலை எங்களுக்கு ஏற்படுகிறது. இவற்றை எதிர்த்து தனி மனிதராக நம்மால் போராட முடியாது. ஆனால் நாம் ஒன்று திரண்டு அமைப்பாக செயல்பட்டால் அனைத்து பிரச்சினைகளை பேசி தீர்க்கலாம் என வேதகுமார் ராஜகோபால் தெரிவித்தார்.
ஆகையால் இந்திய திருமண தொழித்துறையில் உள்ளவர்கள் எங்களுடன் இணைந்து ஓர் குடையின் கீழ் செயல்பட வேண்டும். அந்த வகையில் வரும் ஆகஸ்ட் மாதம் 9ஆம் தேதி நடைப்பெறவுள்ள இந்த விருந்து நிகழ்ச்சியில் இத்தொழில்த்துறையை சார்ந்தவர்கள் திரளாக வந்து கலந்து கொள்ள வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.
செய்தி: காளிதாசன் தியாகராஜன்
படம்: காளிதாசன் இளங்கோவன்
0 Comments