கோலாலம்பூர், ஏப்.30-
தமிழக திரைப்படங்கள் குறிப்பாக பிரபல கதாநாயகர்களின் திரைப்படங்கள் வெளியீடு காணும்போது இங்குள்ள ரசிகர் மன்றங்கள் அதனை வெகுவாக கொண்டாடி மகிழ்வது வழக்கம். அந்த வகையில் உள்நாட்டு திரைப்படங்களுக்கும் அந்த ரசிகர் மன்றங்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டுமென கருத்துகள் இருந்தன.
அந்த வகையில் மலேசிய அஜீத் ரசிகர் மன்றம், தளபதி ரசிகர் மன்றம், சிவகார்த்திகேயன் ரசிகர் மன்றம் ஆகியவை இணைந்து உள்நாட்டு திரைப்படமான பெலட் பிரதர்ஸ் (Blood Brothers) படத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சிறப்பு காட்சியை நேற்று ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்த மூன்று ரசிகர் மன்றங்களும் இணைந்து நேற்று நூ செண்டரில் பிலட் பிரதர்ஸ் உள்ளூர் திரைப்படத்தின் சிறப்பு காட்சியை ஏற்பாடு செய்தனர். ஒரு திரையரங்கு அறையை இவர்கள் வாடகைக்கு எடுத்ததுடன் இத்திரைப்படத்தில் நடித்த நடிகர்களையும் வரவழைத்து சிறப்பாக காட்சியை நடத்தி முடித்தனர்.
மலாய் திரைப்படமான இத்திரைப்படம் அனைவரையும் கவர்ந்து வருகிறது. இத்திரைப்படத்தின் வசூல் வேட்டையும் சூடு பிடித்து வருகிறது என்றுதான் கூற வேண்டும்.
இயக்குநர்கள் அபிலாஷ் சந்திரா மற்றும் ஷாபிக் யூசோப் இயக்கியுள்ளா இத்திரைப்படம் இம்மாதம் 10ஆம் தேதி திரையரங்களில் வெளியீடு கண்டது.
இத்திரைப்படத்தில் ஷர்னாஸ் அகமட், ஷாபிக் கிய்லி, சுக்ரி யாயா,அமிலியா எண்டர்சன் போன்றவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் தளபதி விஜய் நடித்த கோட் திரைப்படத்தில் நடித்திருந்த உள்ளூர் கலைஞர் இர்ஃபான் ஜைனியும் நடித்துள்ளார்.
செல்வாக்கு மிக்க நபர்கள், குண்டர் கும்பல் தலைவர்கள் போன்றவர்களை பாதுகாக்கும் சிறப்பு பாதுகாவலர் குழுவில் (Elite Security Group) உள்ள நண்பர்கள் மத்தியில் நிகழும் துரோகத்தை கருவாக கொண்டு இத்திரைப்படத்தின் கதை அமைந்துள்ளது.
குடும்பம், காதல், துரோகம் என்ற தமிழக சினிமா பாணியில் இத்திரைப்படம் இயக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் நடித்தவர்களும் அவர்களின் திறமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். மேலும் இத்திரைப்படத்தின் காட்சியமைப்புகள், சண்டைக் காட்சிகள், எக்ஷன் காட்சிகள் ஆகியவை சிறப்பாக அமைந்துள்ளன.
தற்போது இத்திரைப்படம் உள்ளூர் திரையரங்குகளில் அமோக வசூலை பெற்று வருகிறது. அனைத்துலக தரத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் மக்கள் மத்தியிலும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
ஆகையால் நம் உள்ளூர் தயாரிப்பான இத்திரைப்படத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மக்கள் அருகிலுள்ள திரையரங்குகளில் சென்று இத்திரைப்படத்தை காணும்படி இந்த சிறப்பு காட்சியை ஏற்பாடு செய்த ரசிகர் மன்றங்களின் தலைவர்கள் கேட்டுக் கொண்டனர்.
0 Comments