கோலாலம்பூர், ஏப்.10-
விடாமுயற்சி திரைப்படத்திற்கு பிறகு நடிகர் அஜித்குமார் நடித்து இன்று வெளியான கூட் பேட் அக்லி (GBU) திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.
இத்திரைப்படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியிடப்பட்டு அமோக வரவேற்பை பெற்றது. குறிப்பாக நம் உள்நாட்டு கலைஞர் டாக்கியின் பாடல் GBU திரைப்படத்தில் இருப்பது பரவலாக பேசப்பட்டது. இங்கு மட்டுமில்லாமல் தமிழகத்திலும் பாடகர் டாக்கிக்கு அதிகமான ரசிகர்கள் இருப்பது டிரெய்லரில் டாக்கியின் பாடல் காட்சி அடங்கிய காணொளி பரவலாக பகிரப்பட்டதிலிருந்து நமக்கு தெரிய வந்தது.
இப்படி டிரெய்லரே அதிரடியாக கொண்டாடப்பட்ட வேளையில், GBU திரைப்படம் இன்று உலகளவில் வெளியீடு கண்டுள்ளது.
நம் நாட்டில் இத்திரைப்படத்தின் முதல் காட்சி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில் மலேசிய அஜித் ரசிகர் தலைமை நற்பணி மன்றம் முதல் காட்சியை ஷா ஆலமிலுள்ள TSR Cinemaவில் கொண்டாடியது. இந்த முதல் காட்சியை காண 1,000க்கும் மேற்பட்ட ரசிகர்கள் அதிகாலையிலேயே அங்கு கூடினர்.
பட்டாசு வெடிப்பு, இயற்கை பனி தூவல் என ஆர்ப்பாட்டமாக இத்திரைப்படத்தின் முதல் காட்சிக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்த முதல் காட்சிக்கு MS Malik Stream நிறுவனத்தின் உரிமையாளர் டத்தோ மாலிக் வருகையளித்திருந்தார். அணிச்சல் வெட்டிய பிறகு ரசிகர்கள் அனைவரும் திரைப்படத்தை காண திரையரங்குக்குள் நுழைந்தனர்.
தல அஜித் குமாரை மீண்டும் திரையில் காண அவர்கள் அனைவரும் காத்திருந்தனர். திரைப்படம் திரையிட்டது முதல் திரைப்படம் முடிந்து பதிவின்போதான காட்சிகள் ஒளிப்பரப்ப்பட்ட வரை ரசிகர்கள் ஆரவாரம் பெரும் அளவில் இருந்தது.
முற்றிலும் வேறுப்பட்ட கோணத்தில் இத்திரைப்படம் இருந்தது. அஜித்தின் ஸ்டைலான நடிப்பு, மாஸ் எண்ரி, ஆடல், ஸ்டன் காட்சிகள் என இத்திரைப்படம் தல டக்கர் டோய் என்பதற்கேற்ப அமைந்திருந்தது.
விறுவிறுப்பான கதை ஓட்டம், அஜித்தின் மாஸ் சீன்கள், நகைச்சுவை பேச்சு, 90ஆம் ஆண்டு பாடல்களின் ரீமிக்ஸ் என தொண்டைத் தண்ணீர் வற்றும் அளவிற்கு ரசிகர்களை கூச்சலிடச் செய்தது.
அதற்கும் மேலாக அஜித்தின் கார் ஸ்ஜேஸ் சீன் போது நம் உள்நாட்டு கலைஞர் டாக்கி வருகையும் அவரின் அதிரடியான பாடலும் அட்டகாசமான ஆட்டமும் திரையரங்கையே அதிர வைத்தது.
இப்படி அடுக்கடுக்காய் காட்சியமைப்புகளின் சிறப்பை கூறலாம். அஜித்தின் முழுமையான மாஸை வெளிப்படுத்திய திரைப்படம் இதுவாகும்.
அதிலும் உடல் எடையை குறைத்து அஜித் கிளின் ஷேவ்வில் வரும் காட்சி வேற லேவல் என்றுதான் கூற வேண்டும்.
நடிகை திரிஷா, பிரபு, பிரசன்னா, அர்ஜுன் தாஸ், அதிலும் குறிப்பாக நடிகை சிம்ரன் ஆகியோரின் நடிப்பு சிறப்பாக இருந்தது.
தல அஜித்தின் ரசிகரான இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்புகளை இத்திரைப்படத்தில் முழுமைப்படுத்தியுள்ளார் என்றுதான் கூற வேண்டும். முழுமையாக ரசிகர்களுக்காகவே இத்திரைப்படத்தின் காட்சிகள் அமைந்துள்ளது. கதைக்கு அதிக முக்கியதுவம் வழங்காமல் Fan Boys-க்காக உருவாக்கப்பட்ட திரைப்படம் இதுவாகும்.
ரவுடியாக இருந்த தந்தை மகனுக்காக திருந்தியது, பிறகு மகனுக்காக மறுப்படியும் டானாக மாறியது என்பதை தொட்டு இத்திரைப்படம் இயக்கப்பட்டுள்ளது. இப்படி அஜித்குமாரின் அல்டிமேட் நடிப்பில் வெளியாகியுள்ள இத்திரைப்படம் அமோக வெற்றியை பெறும் என நம்பப்படுகிறது.
செய்தி: காளிதாசன் தியாகராஜன்
0 Comments