loader
பிகேஆர் கட்சித் தேர்தல்: உதவித் தலைவர் பதவிக்கு டாக்டர் சத்தியா பிரகாஷ் போட்டி!

பிகேஆர் கட்சித் தேர்தல்: உதவித் தலைவர் பதவிக்கு டாக்டர் சத்தியா பிரகாஷ் போட்டி!

உலு சிலாங்கூர், மார்ச் 28-
பிகேஆர் கட்சியின்  துணை பொதுச் செயலாளர் டாக்டர் சத்தியா பிரகாஷ் நடராஜன் வரவிருக்கும் கட்சித் தேர்தலில் உதவித் தலைவர் பதவிக்கு போட்டியிட இருப்பதாக அறிவித்துள்ளார்.

கட்சித் தலைவர்கள், நண்பர்கள் மற்றும் தனது உலு சிலாங்கூர்  கிளையின் உறுப்பினர்களுடன் ஆலோசித்த பிறகு இந்த முடிவை தான் எடுத்ததாக அவர் வெளியிட்ட  அறிக்கையில் கூறினார்.

இந்த போட்டியில் தான் வெற்றி பெற்றால் இளைய தலைமுறை மற்றும் தொழில்முனைவோர்களை கட்சியில் ஈர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாக அவர் உறுதி அளித்துள்ளார்.

மேலும்  கட்சியில் அடிப்படை உறுப்பினர்களின் குரல் முடிவெடுப்பதில் பிரதிபலிக்க வேண்டும் என்றும், ஒவ்வொரு உறுப்பினரும் கட்சிக்காக பங்களிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

பிகேஆர் ஒரு கூட்டணி கட்சியாக மட்டும் இருக்கக்கூடாது, அது நாட்டை முன்னேற்றும் தலைமைக்கட்சியாக இருக்க வேண்டும். கட்சியில் பலமான கொள்கைகள் மற்றும் மக்களின் நலன்களை பிரதிபலிக்கும் நடவடிக்கைகள் இருப்பது அவசியம் என தாம் நினைப்பதாக அவர் கூறினார்.

இதனிடையே 2025 ஆம் ஆண்டின் கட்சியின் தேசிய மாநாட்டில் தேர்தல் தொடர்பான நடுநிலைத்தன்மை  இருக்கக்கூடாது என்பதால், அவர் அம்மாநாட்டின் இயக்குநர் 
பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த பொறுப்புக்கு தகுந்த  வேறு ஒருவரை கட்சித் தலைமைத்துவம் தேர்வு செய்யலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கட்சியின்  உதவித் தலைவர்  பதவிகளுக்கு  மொத்தம் 9 இடங்கள் உள்ளன. அதில் 4 பேர் கட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படுவர். 3 பேர் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நியமிப்பர். இரண்டு பதவிகள் பிகேஆர் இளைஞர் மற்றும் பிகேஆர் மகளிர் தலைவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

நடப்பில் இருக்கும் 5 உதவித் தலைவர்களான  டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, அமினுடின் ஹாருன், நிக் நஸ்மி நிக் அகமட் ,சாங் லிஹ் காங், நூருல் இஸ்சா ஆகியோர் மீண்டும் உதவித் தலைவர் பதவிக்கு போட்டியிடவுள்ளனர்.

இருப்பினும் துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி மற்றும் ஹவாங் உசானி ஷாரி ஆகிய இருவரும் இன்னும் தங்களின் நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை.

இவ்வாண்டு நடைபெறும் பிகேஆர் தேர்தல் மிக முக்கியமானது. ஏனெனில் இது அன்வார் இப்ராஹிம் பிரதமராக ஆன பிறகு நடக்கும் முதல் கட்சித் தேர்தல். கடந்த 2018 தேர்தலுக்குப் பிறகு இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளதால், கட்சி உறுப்பினர்களின் தீர்மானம் எதிர்கால அரசியல் கோட்பாடுகளுக்கு வழிகாட்டும் வகையில் அமைந்துள்ளது என கூறிய அவர், தான் உதவி தலைவர் பதவிக்கு போட்டி இடுவதை உறுதி செய்தார்.

- காளிதாசன் இளங்கோவன்

0 Comments

leave a reply

Recent News