கோலாலம்பூர், மார்ச் 10-
மதம் அல்லது இன வெறுப்பைத் தூண்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தாம் மீண்டும் வலியுறுத்துவதாக அமைச்சர் கோபிந்த் சிங் தெரிவித்துள்ளார்.
பிற மதத்தை அவமதிப்பதை மன்னிக்க முடியாது. அதோடு, பிற மதத்தை அவமதிப்பவர்கள் அதற்கான விளைவினை கட்டாயம் சந்திக்க வேண்டும். இதன் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியம் என அமைச்சர் தமதறிக்கையில் தெரிவித்தார்.
இது தொடர்பாக, கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 7, 2025) அன்று, அமைச்சரவையில் இந்த விஷயம் எழுப்பப்பட்டதாகவும், மேலும் இதுபோன்ற வழக்குகளில் உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற முடிவு கிட்டியதாகவும் அமைச்சர் தமதறிக்கையில் தெரிவித்தார்.
தகவல் அமைச்சர் டத்தோ பாஹ்மி பட்சில் அதே நாளில் இது தொடர்பான அறிக்கையை வெளியிட்டது, இந்த சர்ச்சையின் அவசரத்தை புலப்படுத்துகிறது.
காவல்துறையில் பல புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் பல்வேறு நபர்களிடமிருந்து வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதை நாம் அறிவோம்.
இருந்தாலும் கூட, சிலர் வேண்டும் என்றே, இதே சர்ச்சையை மீண்டும் மீண்டும் எழுப்புவதை நாம் காண்கிறோம். இந்த நிலைமையை மேலும் சிக்கலாக்குவதோடு, பலரைச் சினமடையச் செய்கிறது. ஆகவே இந்த நிலைமையை கருத்தில் கொண்டு காவல்துறையினர் விரைவாகச் செயல்பட வேண்டும் என அமைச்சர் கூறினார்.
பிற மதத்தை அவமதிக்கும் இது போன்ற பதிவுகளையும் அறிக்கைகளையும் வெளியிடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதை, அனுமதிக்க முடியாது என அமைச்சர் கூறினார்.
அவர்கள் மீது உடனடியாகச் சட்டம் பாய வேண்டும். இதுபோன்ற சர்ச்சையை சமாளிக்க சட்ட விதிகள் உள்ளன. இந்த விதிகள் அமல்படுத்தப்படாவிட்டால் அவை அர்த்தமற்றவையாக ஆகிவிடும் என அமைச்சர் கோபிந் சிங் கூறினார்.
0 Comments